ஜெயலலிதா எழுந்து உட்கார்ந்தார்; சைகையில் பேசுகிறார்!

கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடுகள் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆயிரம்விளக்கு கிரீம் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின்னர் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அடுத்தடுத்து வெளியிட்ட மருத்துவ செய்திக்குறிப்புகளில், ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. அக்டோபர் 10ஆம் தேதிக்குப் பின்னர் நேற்று (20ஆம் தேதி) வரை 10 நாட்களாக ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் எவ்வித அறிக்கையையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், ஜெயலலிதா படுக்கையில் இருந்து எழுந்து உட்காருவதாகவும், சைகையில் பேசுவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி கிடைதத்து. இதைத் தொடர்ந்து, இன்று அப்போலோ நிர்வாகம், 10 நாட்களுக்குப் பிறகு ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், ”முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் தொடர் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இருதய, சுவாச, நீரிழிவு மற்றும் கிருமி தொற்று நோய் நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆலோசனையின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிசியோதெரபி சிகிச்சையும் அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவால் பேச முடிகிறது” என்று அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

0a