தருமபுரி இளவரசன் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

2013-ம் வருடம் தருமபுரியில் மர்மமான முறையில் மரணமடைந்த இளவரசனின் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி ரயில்வே தண்டவாளம் ஒன்றின் அருகே இளவரசன் கடந்த 2013ம் ஆண்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மரணம் ஆணவக்கொலை என்றும் திவ்யா என்ற ஆதிக்க சாதி பெண்ணை காதலித்ததால்தான் இளவரசன் கொல்லப்பட்டார் எனவும் பல தகவல்கள் வெளியாயின.

தொடர்ந்து தமிழ்நாடு அரசு அவசர அவசரமாக பிரேத பரிசோதனை நடத்தியதும் அதிக சந்தேகங்களை கிளப்பின. இந்நிலையில் இளவரசனின் மரணத்தில் மர்மம் இருக்கிறது எனவும் பிரேத பரிசோதனை அறிக்கை பல முரண்பாடுகளான தகவல்களை கொண்டிருப்பதால் இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க கோரியும் இளவரசனின் தந்தை இளங்கோ வழக்கு தொடுத்திருந்தார்.

இளவரசனின் தந்தை இளங்கோ தொடுத்திருந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அமர்வு, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மறுப்பு தெரிவித்து அதற்கு பதிலாக இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும், இரண்டு மாதங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறும் சிபிசிஐடி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.