கேரளாவை கலக்கப்போகும் சமுத்திரக்கனியின் ‘அப்பா’!
சுயநல லாபவெறி காரணமாக பேய்களை பெற்றெடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய தமிழ் திரையுலகில், இதற்கு மாறாக, குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் தேவையான கருத்தை சமூகப் பொறுப்புணர்வுடனும், அதேநேரத்தில் கலாபூர்வமாகவும் உரக்கச் சொல்லி, தமிழ் திரைப்பட ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ள படம், சமுத்திரக்கனி எழுதி, இயக்கி, நடித்துள்ள ‘அப்பா’.
குழந்தை வளர்ப்பு, பெற்றோர்களின் பொறுப்புணர்வு, கல்விக்கொள்கை, கல்விக்கொள்ளை, ஆண் – பெண் நட்பு என பல தளங்களிலும் விரிவான பார்வையை செலுத்திய ‘அப்பா’ படம், சில வாரங்களுக்கு முன் தமிழகம் எங்கும் சுமார் 250 திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி மூன்று வாரங்களாகிவிட்டநிலையில் இன்னமும் பல திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
‘அப்பா’ படத்துக்கு கிடைத்த வணிக வெற்றியின் தொடர்ச்சியாக இப்படம் தற்போது கேரளாவில் வெளியாகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே கேரளாவில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சமுத்திரக்கனியின் ‘அப்பா’ படமும் இடம் பிடித்துள்ளது.
சமுத்திரக்கனி கேரள ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர். ‘சிக்கார்’, ‘மாஸ்டர்ஸ்’, ‘திருவம்படி தம்பன்’, ‘த ஹிட் லிஸ்ட்’, ‘டி கம்பெனி’, ‘தி ரிப்போர்ட்டர்’ உள்ளிட்ட பல தரமான மலையாளப் படங்களில் சிறப்பாக நடித்து, கேரள ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இமேஜை ஏற்படுத்தி வைத்திருப்பவர் சமுத்திரக்கனி.
எனவே, ‘அப்பா’ படத்தை கேரளாவில் ரிலீஸ் பண்ணினால் நிச்சயமாக தப்பு பண்ணாது என்ற எண்ணத்தில் பெரிய விலை கொடுத்து படத்தை வாங்கி வெளியிடுகிறார் ஒரு விநியோகஸ்தர். தற்போதைய நிலவரப்படி, கேரளாவில் 25 திரையரங்குகளில் வெளியாகிறது ‘அப்பா’.
தரமான புது முயற்சிகளை வரவேற்பதில் முன்னணியில் இருக்கும் கேரள திரைப்பட ரசிகர்கள், சமுத்திரக்கனியின் ‘அப்பா’வையும் நிச்சயம் கொண்டாடுவார்கள் என உறுதியாக நம்பலாம்.