அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் ‘குற்றம் 23’

அது என்ன குற்றம் 23 என்று கேட்டால், “அது சஸ்பென்ஸ். அது பற்றி சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். ஆனால், கதைக்கு பொருத்தமான தலைப்பு அது. படம் பார்க்கும்போது இதை நிச்சயம் ஒத்துக்கொள்வீர்கள்” என்கிறார் இயக்குனர் அறிவழகன்.

‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து அறிவழகன் இயக்கும் நான்காவது படம் தான் ‘குற்றம் 23’. “சிறுவயதிலிருந்து நிறைய கதை புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. என்னைக் கேட்டால், ஒரு இயக்குனர் நிறைய படங்கள் பார்ப்பதைவிட நிறைய கதை புத்தகங்கள் படிப்பது நல்லது என்பேன். அப்போது தான் வரிகளுக்கிடையில் புதுப்புது கற்பனைகள், புதுப்புது காட்சிகள் தோன்றும். அப்படி நான் படித்து ரசித்த ராஜேஷ்குமாரின் நாவல் ஒன்றில் உள்ள ஒரு பிளாட்டை மட்டும் எடுத்து, அதை தழுவி, இந்த ‘குற்றம் 23’ கதை, திரைக்கதையை அமைத்திருக்கிறேன்” என்கிறார் அறிவழகன்.

“இதுவரை எவரும் கண்டிராத மெடிக்கல் – க்ரைம் – திரில்லர் படமாக இது இருக்கும். ரசிகர்களுக்கு புதுமையை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கியுள்ள திரைப்படம் தான் ‘குற்றம் 23’. எப்படி மற்ற திகில் படங்களிலிருந்து எனது ‘ஈரம்’ தனித்தன்மையுடன் இருந்ததோ, எப்படி மற்ற ஸ்போர்ட்ஸ் படங்களிலிருந்து எனது ‘வல்லினம்’ தனித்து விளங்கியதோ, அதேபோல் ‘குற்றம் 23’ திரைப்படமும் மற்ற மெடிக்கல் – க்ரைம் – திரில்லர் படங்களிலிருந்து தனித்து விளங்கும்.

“இதில் போலீஸ் அதிகாரியாக வரும் நாயகன் அருண் விஜயை முற்றிலும் வேறொரு கோணத்தில் கொண்டு செல்லும் திரைப்படமாக  ‘குற்றம் 23’ அமையும் என்பது உறுதி. சமுதாயத்துக்குத் தேவையான ஒரு மெசேஜை, இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் உணருவார்கள்” என்கிறார் இயக்குனர் அறிவழகன்.

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் எதிர்மறை நாயகனாக நடித்து மக்களின் பாராட்டுகளை அதிகளவில் பெற்ற அருண் விஜய், முதன்முதலாக இதில் போலீஸ் உதவி கமிஷனராக நடிப்பதோடு, இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார். “தரம் வாய்ந்த படங்களை ரசிகர்களுக்கு வழங்குவதே எங்களது  ‘இன் சினிமாஸ் என்டர்டைன்மெண்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய நோக்கம். அதற்கு சான்றாக நாங்கள் எடுத்து வைத்திருக்கும் முதல் அடி தான் ‘குற்றம் 23’. பெரிய பட்ஜெட் படம் என்பதால் இதை என்னால் மட்டும் தனித்து செயல்பட்டு முடித்துவிட முடியாது. அப்படி சற்று தயக்கத்துடனும், குழப்பத்துடனும் இருந்தபோது எனக்கு பக்கபலமாய் அமைந்தவர் தான் என்னுடைய நெருங்கிய நண்பர், ‘ரெதான் – தி  சினிமா பீப்பல்’  நிறுவனத்தின் நிறுவனர்  இந்தெர்  குமார்.

“என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் வந்திருந்தாலும், ஒரு  தனித்துவமான கதைக்களம் கொண்ட திரைப்படத்தை தான் நான் தேடிக் கொண்டிருந்தேன். அந்த ஆசை எனக்கு இயக்குனர் அறிவழகன் சார் மூலம் இப்போது நிறைவேறி உள்ளது” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் அருண் விஜய்.

‘குற்றம் 23’ திரைப்படத்தில் முதல்முறையாக போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் அருண் விஜய், தன்னுடைய ரசிகரான போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரிடம் இந்த படத்துக்காக சில குறிப்புகளை பெற்று இருக்கிறார் என்பது மேலும் சுவாரசியம். “போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கும்போது மிக முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டியது அவர்கள் அடிக்கும் சல்யூட் தான்.  அதை கனகச்சிதமாக நான் கற்றுக்கொள்ள உதவியவர், என்னுடைய ரசிகர் ஒருவர் தான். போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரியும் அவர், வாட்ஸாப் மூலம் எனக்கு சில வீடியோக்களையும், ஒரு சில குறிப்புகளையும் வழங்கினார்” என்கிறார் அருண் விஜய்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘குற்றம் 23’ திரைப்படமானது விரைவில் வெளியாகி, ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Read previous post:
k8
Kuttram 23 – Movie Stills

Close