ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தேசிய விருது: வெங்கய்யா நாயுடுவிடம் ஐஸ்வர்யா தனுஷ் கோரிக்கை!

நடிகர் ரஜினிகாந்த் மூத்தமகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் தற்போது ;சினிமா வீரன்’ என்ற ஆவணப்படத்தை இயக்கி வருகிறார். திரைத்துறையின் நிஜ சாகச ஹீரோக்களான ஸ்டண்ட் கலைஞர்கள் பற்றி பேசும் ஆவணப்படமாக இது உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நடிகர் ரஜினிகாந்த் பின்னணி (வாய்ஸ்ஓவர்) பேசுகிறார்.

திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் ஐஸ்வர்யா தனுஷ், நேற்று மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்தார்.

அப்போது, அமைச்சரிடம் ஐஸ்வர்யா தனுஷ், “திரைத்துறையில் உள்ள பல துறைகளில் சாதனை புரிவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஆண்டுதோறும் தேசிய விருது வழங்கி வருகிறது. அதேபோல் நிஜ சாகச ஹீரோக்களான திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதற்காக ஸ்டண்ட் மாஸ்டர்கள் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள், ஐஸ்வர்யா தனுஷூக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் பாராட்டு தெரிவித்தனர்.