சொந்த ஊரில் ராம்குமார் சடலம்: ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர்அஞ்சலி!

இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த மென்பொறியாளர் சுவாதி (வயது 24), சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24ஆம் தேதி வெட்டி கொல்லப்பட்டார். ஒருதலைக்காதல் காரணமாக இக்கொலையை செய்ததாக, போலீசார், திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை, ஜூலை 1ஆம் தேதி, சர்ச்சைகுரிய முறையில் கழுத்து அறுபட்ட நிலையில் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

சுவாதி கொலைக்கும், ராம்குமாருக்கும் தொடர்பு இல்லை என்றும், அது ஆணவக்கொலையாக இருக்கலாம் என்றும், இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ராம்குமாரின் பெற்றோர், அவரது வழக்கறிஞர் ராம்ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் வற்புறுத்தி வந்தனர்.

ராம்குமாருக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட முடியாமல் போலீசார் திணறுவதாக செய்திகள் வெளியான நிலையில், செப்டம்பர் 18ஆம் தேதி அவர் புழல் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். சிறையில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த மின்கம்பியைக் கடித்து அவர் தற்கொலை செய்ததாக சிறை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் சிறையில் அவர் படுகொலை செய்யப்பட்டதாக ராம்குமார் தரப்பினர் தெரிவித்தனர்.

0a

ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையின்போது, தங்கள் தரப்பு மருத்துவரும் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து நடந்த தொடர் சட்டப் போராட்டத்தில் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

நேற்று (சனிக்கிழமை) பகல் 11.30 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்,  திருவள்ளூர் மாவட்ட நடுவர் மன்ற மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி முன்னிலையில், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மருத்துவர் சுதிர் குப்தா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவர்கள் செல்லக்குமார், வினோத், மணிகண்ட ராஜா, ஸ்டான்லி தடயவியல் நிபுணர் டாக்டர் பாலசுப்ரமணியன் ஆகியோர் ராம்குமாரின் உடலை கூறாய்வு செய்தனர். இக்கூறாய்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

கூறாய்வுக்கு முன், ராம்குமார் உடலை அடையாளம் காட்டிய அவரது தந்தை, ராம்குமாரின் உடலில் காயங்கள் இருப்பதாக மாஜிஸ்திரேட் தமிழ்செல்வியிடம் சுட்டிக் காட்டினார்.

பிரேத பரிசோதனை முடிந்ததும் ராம்குமாரின் சடலம், அவரது தந்தை பரமசிவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அது 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

0a1j

ராம்குமார் சடலம் ஊர் வந்து சேர்ந்ததும், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். துக்கம் தாங்காமல் பெண்களும், குழந்தைகளும் பெருங்குரலெடுத்து கண்ணீருடன் கதறி அழும் சத்தம் மீனாட்சிபுரம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. “பாசிச ஜெயலலிதா அரசை வீழ்த்துவோம்” என்ற இளைஞர்களின் சபத முழக்கம் விண்ணைப் பிளக்கிறது.