4 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது, காவிரி விவகாரத்தில்  இரு மாநில அரசுகளையும் அழைத்து மத்திய அமைச்சர் உமாபாரதி நடத்திய பேச்சுவார்த்தை குறித்த அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதையடுத்து, வரும் செவ்வாய்க்கிழமைக்குள் (அக்டோபர் 4ஆம் தேதிக்குள்) காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்குள்  தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகளும் தங்களது மாநிலம் சார்பில் மேலாண்மை வாரியத்தில் இடம்பெறும் நிபுணர்களின் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் செயல்பாட்டுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களும் உச்சநீதின்றத்தின் உத்தரவை பின்பற்றித் தான் ஆக வேண்டும். கடந்த இரண்டு உத்தரவுகளை மீறிய கர்நாடக அரசுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. கர்நாடகா அக்டோபர் 1ஆம் தேதி முதல் தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும்” என்றும் அது உத்தரவு பிறப்பித்துள்ளது.