கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் மரணம்

பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று (ஏப்ரல் 30ஆம் தேதி) மரணமடைந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை 3 மணிக்கு காலமானார் .அவருக்கு வயது 54

கே.வி.ஆனந்தின் உடல், மருத்துவமனையிலிருந்து நேரடியாக சென்னை பெசண்ட் நகர் மின்மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அரசு விதிமுறைப்படி தகனம் செய்யப்பட்டது. வழியில் 5 நிமிடங்கள் மட்டும் அவரது வீட்டில் அவருடைய உடல் வைக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டது.

அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குமார் வெங்கடேசன் ஆனந்த் என்ற இயற்பெயர் கொண்டவர் கே.வி.ஆனந்த். பத்திரிகை புகைப்படக்காரராக தனது கலையுலகப் பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து ’கோபுர வாசலிலே’, ’மீரா’, ’தேவர் மகன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றினார்.

1994ஆம் ஆண்டு மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘தேன்மாவின் கொம்பத்’ படத்தில் முதன்முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கே.வி.ஆனந்துக்கு கிடைத்தது.

1996ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படத்தில் தமிழில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அப்படம் நல்ல வரவேற்பை பெறவே பின்னர் தொடர்ந்து நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

2005ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் கே.வி.ஆனந்த் இயக்குனராக அவதாரம் எடுத்தார். எனினும், 2009ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் அவர் இயக்கிய ‘அயன்’ படம் சூப்பர்ஹிட் ஆனது. தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு வெளியான ‘கோ’ படத்தின் வெற்றி கே.வி.ஆனந்தை தமிழின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக முன்னிறுத்தியது.

இறுதியாக 2019ஆம் ஆண்டு சூர்யா நடித்த ‘காப்பான்’ படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார்.