“அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கள்”: ஜெயலலிதா கையெழுத்துடன்(?) அறிக்கை வெளியீடு!

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், புதுவையில் நெல்லிக்குப்பம் ஆகிய 4 சட்டபேரவை தொகுதிகளில் வருகிற 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என வாக்காளர்களை கேட்டுக்கொள்ளும் அறிக்கை ஒன்று, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெயரில் இன்று வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கை ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லாமல் முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் ஜெயலலிதாவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

0a1b

மேலே இருக்கும் அறிக்கையில் ஜெயலலிதாவின் பெயர் தான் இருக்கிறதே தவிர, கையெழுத்து இல்லை. அதன் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை கீழே இருக்கிறது. அதில் ஜெயலலிதாவின் கையெழுத்து இடம் பெற்றுள்ளது.

0a1c

சில தினங்களுக்குமுன் தேர்தல் கமிஷனின் மிக முக்கிய ஆவணமான பி பார்மில் கையெழுத்து போட இயலாததால் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், வாக்கு கேட்கும் சாதாரண அறிக்கையில் ஜெயலலிதாவின் கையெழுத்து இடம் பெற்றிருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

ஜெயலலிதாவின் பெயரில் வெளியாகியுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

என் அன்பிற்குரிய அதிமுக உடன்பிறப்புகளே, என் மீது பேரன்பு கொண்ட தமிழக மக்களே, உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த வணக்கங்கள்!

உங்கள் அன்புச் சகோதரியாகிய என் மீது மிகுந்த அன்பும், பற்றும், அக்கறையும் கொண்டு தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் நீங்கள் செய்த பிரார்த்தனைகளாலும், வழிபாடுகளாலும் நான் மறுபிறவி எடுத்துள்ளேன் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு முதற்கண் பகிர்ந்து கொள்கிறேன்.

உங்களுடைய பேரன்பு இருக்கையில் எனக்கு என்ன குறை! எப்பொழுதும் என்னை வழிநடத்திக் காத்து வருகின்ற எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் நான் வெகுவிரைவில் முழுமையான நலம் பெற்று வழக்கமான பணிகளில் ஈடுபடக் காத்திருக்கிறேன்.

ஓய்வு நான் அறியாது, உழைப்பு என்னை நீங்காதது. புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் அறிவுரையின் பேரில், நான் பொது வாழ்வுக்கு வந்த நாள் முதல் தமிழக மக்களுக்காகவும், அதிமுகவின் வளர்ச்சிக்காகவும் நொடிப் பொழுதும் சலிப்பில்லாமல் பாடுபட்டு வருகிறேன்.

என் பொருட்டு கழக உடன்பிறப்புகள் சிலர் அன்பு மிகுதியால், தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டனர் என்பதை அறிந்து நான் மிகுந்த மன வேதனையுற்றேன். உங்களுடைய உழைப்பும், விசுவாசமும் அதிமுகவின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் பயன்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

தற்போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் – நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் 19.11.2016 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், உங்களையெல்லாம் இந்த அறிக்கை வாயிலாக நான் கேட்டுக் கொள்வது, அதிமுகவின் வெற்றிக்கு நீங்கள் முழு மூச்சுடன் பாடுபட வேண்டும் என்பதே.

குறிப்பாக, இந்தத் தொகுதிகளில் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணியாற்றி வரும் பல்வேறு பணிக்குழு பொறுப்பாளர்களையும், கழக உடன்பிறப்புகளையும், இந்தத் தொகுதிகளில் வாழுகின்ற வாக்காளப் பெருமக்களையும் என்னால் நேரில் சந்திக்க இயலவில்லை என்ற போதும், என்னுடைய எண்ணமும், இதயமும் எப்பொழுதும் உங்களுடனேயே இருக்கின்றன.

கொண்ட கொள்கையில் வெற்றிக்காகப் பாடுபடுவதிலும், ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாக உழைப்பதிலும் தன்னிகரற்ற செயல்வீரர்கள், வீராங்கனைகளாகிய அதிமுக உடன்பிறப்புகள் என்னுடைய இந்த அறிக்கையில் இயல்பை புரிந்துகொண்டு, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கண்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னம் மகத்தான வெற்றி பெறும் வண்ணம் கடமை உணர்வோடு பணியாற்றுங்கள்.

உலகம் வியக்கும் உன்னதத் திட்டங்கள் பலவற்றை தமிழகத்தில் அறிமுகம் செய்து, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அரும்பாடுபட்டு வரும் எனது தலைமையிலான அதிமுக அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற திட்டங்கள் பலவற்றை மனதில் கொண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் என்றும் போல் உங்கள் அன்பையும், பேராதரவையும் இந்தத் தேர்தலில் அதிமுகவிற்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும், அதிமுகவின் வெற்றியே தமது வெற்றி என்ற லட்சிய வேட்கையோடு, கழக வேட்பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் கடமை உணர்வோடு தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும்.

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று முழங்கிய இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, அதிமுகவின் வெற்றி எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் வகையில் அமைந்திட வேண்டும். அத்தகைய வெற்றிச் செய்திக்காக நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.