“செல்வாக்கு சரிந்துவிட்டதை நினைத்து அழ ஆரம்பித்திருக்கிறார் மோடி!”

“ரூ.500, ரூ.1000 செல்லாது” என திடீரென அறிவித்த ‘21ஆம் நூற்றாண்டின் முகமது பின் துக்ளக்’ நரேந்திர மோடியின் நடவடிக்கையால், கருப்பு பண முதலைகள் எல்லாம் “வாவ்…! ஹேட்ஸ் ஆஃப் மோடி” என்று பாராட்டி பார்ட்டி வைத்துக்கொண்டிருக்க, ஏழை எளிய மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் அன்றாட செலவுக்குக் கூட பணமில்லாமல் திண்டாடி அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மோடியை கெட்ட கெட்ட வார்த்தைகளில் பச்சை பச்சையாக திட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் கோவாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மோடி, பேசிக்கொண்டிருக்கும்போதே கண் கலங்கினார். இது குறித்து எவிடென்ஸ் கதிர் பதிவு:-

ன் உயிருக்கு ஆபத்து” என்று மோடி அழுகிறார். இது முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறை இல்லை. மக்களின் கொந்தளிப்பினைப் பார்த்து பயந்து இருக்கிறீர்கள். நமது செல்வாக்கு சரிந்து போய்விட்டது என்பதை உணர்ந்து அழ ஆரம்பித்து இருக்கிறீர்கள்.

“தலித்துகள் மீது தாக்குதல் நடத்தாதீர்கள். என் மீது தாக்குதல் நடத்துங்கள்” என்று சொன்னீர்கள். இப்போது, “ஊழலை ஒழிக்க என் உயிரினையும் கொடுப்பேன்” என்று சொல்லுகிறீர்கள். இது எல்லாம் உங்களின் இயலாமையை காட்டுகிறது.

ஆரம்பத்தில் உங்களுக்கு ஆதரவு அளித்த கட்சிகள், சினிமா பிரபலங்கள் இப்போது உங்களை போன்றே பயந்து இருக்கிறார்கள்.

அரசியல் ஸ்டண்டுக்காக கொண்டுவரும் எந்த நடவடிக்கையையும் மக்கள் புறம் தள்ளுவார்கள். நீங்கள் கொண்டு வந்தது கருப்பு பணத்தை ஒழிக்காது. இது கண் துடைப்பு என்பதை சாமானியனும் புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டான்.

புலிவாலை பிடிக்கப் போய், அது உங்களையே பழி தீர்க்க ஆரம்பித்துவிட்டது. முதலாளிகளும் கருப்பு பணமும் பிரிக்க முடியாதது. அந்த முதலாளிகளுக்காக எப்போது நீங்கள் உலகம் சுத்த ஆரம்பித்தீர்களோ அப்போதே மக்கள் உங்களை நம்புவதாக இல்லை.

நாங்கள் உழைத்த காசினை பெற கூட முடியாமல் பரதேசியாக எங்களை வரிசையில் நிற்க வைத்து கொடுமை செய்யும் உங்கள் நிர்வாகம் தரை தட்டி நிற்கிறது. உங்களை வெற்றி பெற செய்ய ஒரு முறைதான் வரிசையில் நின்றோம். எங்களுக்கு கூலியாக தினம்தோறும் வரிசையில் நிற்க வைத்து அழகு பார்க்கும் உங்களை என்னவென்று சொல்லுவது?

நீங்கள் ஏன் அழ வேண்டும்? உங்களால் நாங்கள் அழுதுகொண்டு இருக்கிறோமே, போதாதா?

“இது நல்ல திட்டம். ஆனால் முன் ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்” என்கிற அரைவேக்காட்டுத்தனமான அறிவாளிகள் இருக்கும் வரை உங்கள் காட்டில் மழைதான்.

நடத்துங்கள். சர்ஜிக்கல் ஆபரேஷன் வெற்றி. ஆனால், நாங்கள் செத்துக் கிடக்கிறோம். வாய்கரிசிக்காகவது சில்லரை கிடைக்குமா?

– எவிடென்ஸ் கதிர்