“அன்புள்ள மோடி ‘மாமா’வுக்கு”: வங்கி க்யூவின் நின்றபடி எழுதிய கடிதம்!

அன்புள்ள மோடி “மாமா” அறிய,

நீங்கள் நலமென கருதுகிறோம். நீங்கள் ஜப்பானுக்கு போய் சேர்ந்த விவரம் அறிந்தோம். மிகுந்த சந்தோசம். நீங்கள் ஜப்பான் புறப்படும்போது எங்களால் வழியனுப்ப வர இயலவில்லை. நான் அப்போது, போனவாரம் சம்பளமா வாங்கின 1000 ரூபாய் நோட்டுகள் ரெண்டுடன் க்யூவில் நின்று கொண்டிருந்தேன்.

ஜப்பானில் மழை இருக்கிறதா? தனியாக வெளியில் இறங்கி நடக்க வேண்டாம். ஜலதோஷம் பிடித்துவிடும்.

நாங்கள் இங்கே ரொம்ப சுகம். இப்போ நம் ஊரில் திருட்டு பயமெல்லாம் இல்லை. மக்கள் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் பரோபகாரிகளாகி விட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் கடன் கேட்பதில்லை. மாசமானால் பால் காசு, வாடகை, பேப்பர் காசு என்று யாருமே காசே கேட்க மாட்டேன் என்கிறார்கள். இந்த வருஷம், கம்பனி நஷ்டத்தில போறதால போனஸ் தர முடியாதுன்னு சொன்ன முதலாளி, உடனே வந்து போனசை வாங்கிட்டு போகச் சொல்றாரு. வீட்டுக்கு 35,000 ரூபாய் கண்டிப்பா அட்வான்சா தரணும்ன்னு சண்டை போட்டு வாங்கின வீட்டுகாரர்,  இப்போ ‘அட்வான்ஸ் வேண்டாம் தம்பி, அப்புறமா நிதானமா கொடுங்க’ன்னு எவ்வளவு பெருந்தன்மையா திருப்பிக் கொடுத்திட்டு போறாரு தெரியுமா…?

அட, அவ்வளவு ஏன்…? ஒரு நாள் லேட்டா காசு கொடுத்தாக் கூட அசிங்கம் அசிங்கமா பேசுற தண்டல்காரர் இப்பெல்லாம் எவ்வளவு இதம் பதமா பேசுறாரு தெரியுமா…? வாரத்துக்கு ஒரு முறை தண்டல் பணம் வாங்க வாரவரு, அப்புறமா கொடுங்கன்னு முன்னக்கூட்டியே வீட்டுல வந்து சொல்லிட்டு போறாரு…!

நாங்க இப்போ ரொம்ப ஹேப்பியா இருக்கோம். இப்போ வீட்டுல சமையல் இல்லாததால், காசு செலவே இல்லை. நாங்கெல்லாம் இப்போ முழு நேரமும் வங்கி முன்னால க்யூவில நிக்குறதால, வேற வேலையும் இல்லை. இனி இந்த 2000 ரூவா கைக்கு வந்த பிறகு சில்லறை மாற்ற, வேற க்யூவில நிற்க வேண்டியிருக்கிறது. ஆனாலும் வெயிலில க்யூவில் நிற்பது செம த்ரில்லா இருக்கு தெரியுமா…?எங்களுக்காக இவ்வளவு செஞ்சிட்டு உங்களுக்கு அதை அனுபவிக்கிற குடுப்பினை இல்லையேன்னு நினைச்சா பாவமா இருக்கு…!

ஜப்பானில் பீப்பீயும் தவிலும் நிறைய கிடைக்குமாமே, வரும்போது கொஞ்சம் நிறைய வாங்கிட்டு வாங்க. க்யூவில் நிற்கும்போது எப்பவும் உங்களை திட்டிட்டே ஒரு கூட்டம் நிக்குறானுங்க. அவனுங்க சத்தம் வெளில கேக்காம இருக்கவும், க்யூவில நிக்கிறவங்களுக்கு தேசபக்திய ஊட்டி வளர்த்து உற்சாகப்படுத்துறக்கும் பயன்படும்…!

சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. க்யூவில் நின்று கடிதம் எழுதுவதால் அதிகம் எழுத முடியவில்லை. அந்த மீதி இருக்கிற 5, 10, 20, 50, 100 ஆகிய நோட்டுகளையும் கூட செல்லாததாக்கி, இது போன்று நிறைய க்யூகளை எதிர்பார்த்து காத்திருக்கும்…

வேலைவெட்டிக்கு போகாமல் ஒரு வாரமா க்யூவில் நிற்கும் கறுப்புப் பணக்காரன்..! ஜெய் ஹிந்த்…!!

 (Shared from Sadan Thuckalai)