ரூ.500, ரூ.1000 நோட்டுகளை நீங்கள் டெபாசிட் செய்தால் உங்களுக்கான வரி, அபராதம் முழு விவரம்!

“செல்லாது” என அறிவிக்கப்பட்டுள்ள 500, 1000 ரூபாய் நோட்டுக்களை நீங்கள் வங்கியில் செலுத்தினால், நீங்கள் செலுத்துகிற தொகையை பொறுத்து உங்களுக்கு வரியும், 200 சதவிகிதம் அபராதமும் விதிக்கப்படும் என மோடி அரசு அறிவித்துள்ளது.

எனவே, நீங்கள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டுபோய் வங்கியில் டெபாசிட் செய்யும்முன், நீங்கள் டெபாசிட் செய்ய இருக்கும் தொகைக்கான வரி மற்றும் அபராதம், இவை போக உங்கள் கணக்கில் இருப்பு வைக்கப்படும் தொகை ஆகியவை பற்றி தெரிந்துகொள்வது நல்லது அல்லவா?

அது பற்றிய முழு விவரம் வருமாறு:

ரூ.2 லட்சத்து 50 ஆயிரம்:

நீங்கள் ரூ.500 முதல் ரூ.2லட்சத்து 50ஆயிரம் வரை டெபாசிட் செய்யும் எந்த தொகைக்கும் வரியோ, அபராதமோ விதிக்கப்பட மாட்டாது. அதாவது, ரூ.2லடசத்து 50ஆயிரம் வரை நீங்கள் செலுத்தும் தொகை அப்படியே முழுசாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

ரூ.5 லட்சம்:

ரூ.5 லட்சம் டெபாசிட் செய்தால், அதில் வரி விதிப்பில்லாத தொகையான ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் போக, மீதமுள்ள ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு 10 சதவிகிதம் வரி என்ற கணக்கில் ரூ.25 ஆயிரம் வரியும், அந்த வரியை போல் 200 சதவிகிதம் (அதாவது, அந்த வரியை போல் 2 மடங்கு) அபராதம் என்ற கணக்கில் ரூ.50 ஆயிரம் அபராதமும் என மொத்தம் ரூ.75 ஆயிரம் கட்ட வேண்டும். அதாவது, நீங்கள் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்தால், அதில் ரூ.75 ஆயிரம் மோடி அரசுக்கு போய்விடும். மீதமுள்ள ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மட்டுமே உங்கள் வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கப்படும்.

ரூ.10லட்சம்:

ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால், அதில் வரி விதிப்பில்லாத தொகையான ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் போக, மீதமுள்ள ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில், முதல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு 10 சதவிகிதம் வரி என்ற கணக்கில் ரூ.25 ஆயிரம் வரியும், அடுத்துள்ள ரூ.5 லட்சத்துக்கு 20 சதவிகிதம் வரி என்ற கணக்கில் ரூ.1 லட்சம் வரியும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரியாக கணக்கிடப்படும். இந்த வரியை போல 200 சதவிகிதம் (அதாவது, இந்த வரியை போல் 2 மடங்கு) அபராதம் என்ற கணக்கில் ரூ.2 லட்சத்து 50ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதாவது, நீங்கள் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால், வரியும் அபராதமுமாக ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மோடி அரசுக்கு சென்றுவிடும். மீதமுள்ள ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் மட்டுமே உங்கள் வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படும்.

ரூ.20 லட்சம்:

ரூ.20 லட்சம் டெபாசிட் செய்தால், அதில் வரி விதிப்பில்லாத தொகையான ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் போக, மீதமுள்ள ரூ.17 லட்சத்து 50 ஆயிரத்தில், முதல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு 10 சதவிகிதம் வரி என்ற கணக்கில் ரூ.25 ஆயிரம் வரியும், அடுத்துள்ள ரூ.5 லட்சத்துக்கு 20 சதவிகிதம் வரி என்ற கணக்கில் ரூ.1 லட்சம் வரியும், அதற்கு அடுத்துள்ள ரூ.10 லட்சத்துக்கு 30 சதவிகிதம் வரி என்ற கணக்கில் ரூ.3 லட்சம் வரியும் என மொத்தம் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் வரியாக கணக்கிடப்படும். இந்த வரியை போல 200 சதவிகிதம் (அதாவது, இந்த வரியை போல் 2 மடங்கு) அபராதம் என்ற கணக்கில் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதாவது, நீங்கள் ரூ.20 லட்சம் டெபாசிட் செய்தால், வரியும் அபராதமுமாக ரூ.12 லட்சத்து 75 ஆயிரம் மோடி அரசுக்கு சென்றுவிடும். மீதமுள்ள ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் மட்டுமே உங்கள் வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படும்.

ரூ.30 லட்சம்:

ரூ.30 லட்சம் டெபாசிட் செய்தால், அதில் வரி விதிப்பில்லாத தொகையான ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் போக, மீதமுள்ள ரூ.27 லட்சத்து 50 ஆயிரத்தில், முதல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு 10 சதவிகிதம் வரி என்ற கணக்கில் ரூ.25 ஆயிரம் வரியும், அடுத்துள்ள ரூ.5 லட்சத்துக்கு 20 சதவிகிதம் வரி என்ற கணக்கில் ரூ.1 லட்சம் வரியும், அதற்கு அடுத்துள்ள ரூ.20 லட்சத்துக்கு 30 சதவிகிதம் வரி என்ற கணக்கில் ரூ.6 லட்சம் வரியும் என மொத்தம் ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் வரியாக கணக்கிடப்படும். இந்த வரியை போல 200 சதவிகிதம் (அதாவது, இந்த வரியை போல் 2 மடங்கு) அபராதம் என்ற கணக்கில் ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதாவது, நீங்கள் ரூ.30 லட்சம் டெபாசிட் செய்தால், வரியும் அபராதமுமாக ரூ.21 லட்சத்து 75 ஆயிரம் மோடி அரசுக்கு சென்றுவிடும். மீதமுள்ள ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் மட்டுமே உங்கள் வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படும். (ரூ.30 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும் தொகைகளுக்கும் இதே முறையில் தான் வரியும், அபராதமும் கணக்கிடப்படும்.)

ரூ.40 லட்சம்:

ரூ.40 லட்சம் டெபாசிட் செய்தால், வரி ரூ.10 லட்சத்து 25 ஆயிரம், அபராதம் ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.30 லட்சத்து 75 ஆயிரம் மோடி அரசுக்கு சென்றுவிடும். மீதமுள்ள ரூ.9 லட்சத்து 25 ஆயிரம் மட்டுமே உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

ரூ.50 லட்சம்:

ரூ.50 லட்சம் டெபாசிட் செய்தால், வரி ரூ.13 லட்சத்து 25 ஆயிரம், அபராதம் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.39 லட்சத்து 75 ஆயிரம் மோடி அரசுக்கு சென்றுவிடும். மீதமுள்ள ரூ.10 லட்சத்து 25 ஆயிரம் மட்டுமே உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

ரூ.100 லட்சம் (அதாவது ரூ.1 கோடி)

ரூ.1 கோடி டெபாசிட் செய்தால், வரி ரூ.28 லட்சத்து 25 ஆயிரம், அபராதம் ரூ.56 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.84 லட்சத்து 75 ஆயிரம் மோடி அரசுக்கு சென்றுவிடும். மீதமுள்ள ரூ.15 லட்சத்து 25 ஆயிரம் மட்டுமே உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்து தப்பிக்கலாமா?

அதிக அளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களில் ஒரு சாரார், “ஒரேயடியாக வங்கியில் செலுத்தினால் கேள்விகள் எழும். அதற்கு பதிலாக, பல்வேறு வங்கிகளின் கிளைகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பணம் செலுத்தினால், வருமான வரித் துறையிடம் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்” என எண்ணுகிறார்கள். இது குறித்து வருமான வரித் துறை மற்றும் வங்கி அதிகாரிகள் அளித்துள்ள விளக்கம் வருமாறு:

எந்த வங்கிக் கிளையிலும் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை செலுத்தும்போதோ, எடுக்கும்போதோ கண்டிப்பாக வருமான வரி நிரந்தர கணக்கு (PAN) எண்ணை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கும்போது, பல்வேறு வங்கிகளின் எத்தனை கிளைகளில் தனித்தனியாக பணம் செலுத்தினாலும், குறிப்பிட்ட நபரின் பணப் பரிவர்த்தனை முழுவதும் ‘பான் எண்’ வாயிலாக வருமான வரித் துறையினருக்கு தெரிந்துவிடும்.

கணிசமான தொகையை பரிவர்த்தனை செய்பவர்கள் பற்றிய விவரங்களை வங்கி நிர்வாகமே வருமான வரித் துறைக்கு தெரிவிப்பதும் உண்டு. ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்’ (நோ யுவர் கஸ்டமர்) என்ற முறையின் கீழ் வங்கிகள் சேகரித்து வைத்திருக்கும் வாடிக்கையாளர் விவரங்களை வருமான வரித் துறையினர் கேட்டுப் பெறவும் செய்யலாம்.

ஒருவர் குறிப்பிட்ட வங்கியின் பல்வேறு கிளைகளில் வங்கிக் கணக்கு தொடங்கும்போது கணக்கு வைத்திருப்போருக்கான பிரத்யேக எண் (வாடிக்கையாளர் ஐடி) ஒன்று ஏற்படுத்தப்படும். அது வாடிக்கையாளருக்கு தெரியாது. அவர் எத்தனை கிளையில் கணக்கு தொடங்கினாலும் அவருக்கு ஒரே ஒரு எண் தான். அந்த எண் மூலம் அவரது மொத்த பணப் பரிவர்த்தனை விவரங்களை அந்த வங்கியிடம் இருந்து வருமான வரித் துறையினர் பெறலாம்.

அதேநேரத்தில், பல்வேறு வங்கிக் கிளைகளில் தினமும் ரூ.49 ஆயிரம் வீதம் பணம் செலுத்தினால், அதைக் கணக்கிட இயலாது. அது போன்ற சூழலில், யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டாலோ, புகார் வந்தாலோ, அதன் அடிப்படையில் குறிப்பிட்ட நபரின் பணப் பரிவர்த்தனை சோதித்து அறியப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் தினமும் ரூ.49 ஆயிரம் வீதம் பணம் செலுத்துவோர் பற்றிய விவரங்களையும் தெரிவிக்குமாறு வங்கிகளை வருமான வரித் துறை கேட்டிருப்பதாகத் தெரிகிறது.