நடிகர் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் தூக்கிட்டு தற்கொலை

பிரபல திரைப்பட நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியில் மூத்த மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திரைத்துறையில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட விஜய் ஆண்டனி சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள். இதில், மூத்த மகள் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் குடும்பத்தினர் அனைவரும் வழக்கம்போல படுக்கை அறைக்கு உறங்க சென்றனர். மூத்த மகளும் தனக்கான அறைக்கு சென்றார். நேற்று அதிகாலை 3 மணியளவில் கண் விழித்த விஜய் ஆண்டனி, தனது மகளின் அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு அவர் மின் விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விஜய் ஆண்டனி கதறி அழுதார். பின்னர், தனது உதவியாளர் உதவியுடன் மகளை மீட்டு கீழே இறக்கி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதற்கிடையே, தகவல் அறிந்து தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு காலை 6.10 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து மதியம் 12.40 மணியளவில் சிறுமியின் உடல், விஜய் ஆண்டனியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவரது வீட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக, தடயவியல் துறையினர் விஜய் ஆண்டனி வீட்டுக்குச் சென்று போலீஸார் உதவியுடன் சிறுமியின் அறை முழுவதும் ஆய்வு செய்தனர். சிறுமி பயன்படுத்திய செல்போனை போலீஸார் பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மன அழுத்தம்: 

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், சிறுமி சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மன அழுத்தம் காரணமாகவே சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகை குஷ்பு, நடிகர்கள் சந்தானம், மன்சூர் அலிகான், நகுல் உள்பட பல திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் சிறுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

உருக்கமான கடிதம்: 

இதற்கிடையில், சிறுமியின் அறையில் இருந்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதில், குடும்பம் மற்றும் நண்பர்களை மிஸ் செய்வதாக குறிப்பிட்டிருந்ததாகவும், அது எப்போது யாரால் எழுதப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

மேலும், சிறுமியின் உடல் அடக்கம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் இன்று நடைபெறுகிறது.

வைரலாகும் வீடியோ: 

இதற்கிடையே, தற்கொலை கூடாது என விஜய் ஆண்டனி பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. அதில், ‘‘எனக்கு 7 வயதாக இருக்கும்போது என் தந்தை தற்கொலை செய்து கொண்டார். கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு என் தாய் பட்ட கஷ்டங்களால் அந்த வலி என்ன என்று எனக்கு நன்றாகத் தெரியும். நிறைய குழந்தைகளும் தற்கொலை எண்ணத்துடன் இருக்கிறார்கள். பெற்றோர் தங்கள் குழந்தைகள் மேல் அழுத்தம் கொடுக்கக் கூடாது. மற்றவர்கள் உங்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என எதிர்பார்க்காமல் நீங்கள் உங்களை நேசியுங்கள்’’ என அதில் கூறியுள்ளார்.

 

Read previous post:
0a1a
“சீரன்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Netco Studios சார்பில் ஜேம்ஸ் கார்த்திக், நியாஸ் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராஜேஷ் M அவர்களின் அஷோசியேட் இயக்குநர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக்,

Close