நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாநகரங்களில் வாக்குப்பதிவு மந்தம்!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவானது இன்று (19-02-2022) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற்று நிறைவடைந்தது.

மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 12,602 வார்டுகளில், வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 57,778 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.முக. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே,பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், விஜய், சூர்யா, கார்த்தி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

இன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 60.70 % வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 80.49% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாநகராட்சிகளில் மந்தமாகவும், நகராட்சிகளில் சுமாராகவும், பேரூராட்சிகளில் விறுவிறுப்பாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதாவது  மாநகராட்சிகளில் மொத்தம் 52.22% வாக்குகளும், நகராட்சிகளில் 68.22%, வாக்குகளும், பேரூராட்சிகளில் 74.68% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மாநகராட்சிகளில், சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்சமாக 43.59% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன அதிகபட்சமாக கரூர் மாநகராட்சியில் 75.84% வாக்குகள் பதிவாகியுள்ளன. நகராட்சிகளில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இன்றைய வாக்குப்பதிவின்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சச்சரவுகள் ஏற்பட்டபோதிலும், பெரிய அளவில் அசம்பாவிதங்கள் இல்லாமல் பொதுவாக அமைதியாக நடந்து முடிவடைந்தது.

இன்று பதிவான வாக்குகள் வரும் 22-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Read previous post:
0a1i
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ டீசர்: 24 மணிநேரத்தில் 5 மில்லியன் பார்வைகளை கடந்தது!

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ்,

Close