“என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது”: நீதிபதியிடம் ராம்குமார் நேரில் முறையீடு!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், கையெழுத்து போட மறுத்து விட்டார். மேலும், தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக அவர் நீதிபதியிடம் நேரில் முறையிட்டார். இதனால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நெல்லையை சேர்ந்த ராம்குமார் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ராம்குமார் கையெழுத்து மாதிரியை பெற அனுமதிக்க வேண்டும் என போலீசார் எழும்பூர் 14வது நடுவர் நீதித்துறை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராம்குமாரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி கையெழுத்து மாதிரியை பெற்றுக்கொள்ளலாம் என கூறினார்.

இதனையடுத்து ராம்குமார் பலத்த பாதுகாப்புடன் எழும்பூர் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி கோபிநாத், ராம்குமாரிடம் கையெழுத்து போட சொன்னார். ஆனால் கையெழுத்து போட மறுத்த ராம்குமார், தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறினார். இதனால் ஏமாற்றம் அடைந்த போலீசார், ராம்குமாரை புழல் சிறையில் மீண்டும் அடைத்தனர்.

இதன் பின்னர் ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராம்குமாருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி அவர் தான் குற்றவாளி என நிரூபிக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்” என கூறினார்.

ராம்குமாரின் தந்தை கூறுகையில், “ராம்குமார் கைது செய்யப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கேட்டு நாளை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. ராம்குமார் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துக்குமார் என்பவரை கைது செய்ய வந்த போலீசார், ராம்குமாரை கைது செய்துள்ளனர்” என கூறினார்.