சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் கொலை: பாலியல் தரகர் கைது

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 68). கட்டுமானத் தொழில் செய்து வந்தவர். சினிமாவுக்கு பைனான்சும் செய்து வந்தார். நடிகர் ராம்கி நடித்த ‘சாம்ராட்’, ‘ஒயிட்’ ஆகிய 2 திரைப்படங்களை தயாரித்தவர். இவருக்கு பாக்கியம்மாள் (வயது 60) என்ற மனைவியும், கார்த்திகேயன் (40), கவுசிக் (36) என 2 மகன்களும் உள்ளனர்.

இருதினங்களுக்கு முன் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற பாஸ்கரன் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் விருகம்பாக்கம், சின்மயா நகர் பாலம் அருகே சாலையோரம் கருப்பு நிற கவரில் கை, கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி அடைத்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து விருகம்பாக்கம் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்தனர்.

 அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் பாஸ்கரன் உடலை வீசிவிட்டு சென்றது தெரிந்தது. மேலும், அதே பகுதியில், விருகம்பாக்கம் அரங்கநாதன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பாஸ்கரனின் கார் மீட்கப்பட்டது.

 அந்த குடியிருப்பில் வாடகைக்கு வசிக்கும் கணேசன் (50) என்பவரது வீட்டுக்கு பாஸ்கரன் கடைசியாக வந்து சென்றதும் தெரிய வந்தது. ஆனால் கணேசன்  வீட்டை பூட்டிவிட்டு சென்றதால், சந்தேகமடைந்த போலீஸார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர், செங்குன்றம் அருகே பதுங்கியிருந்த கணேசனை தனிப்படை போலீஸார் நேற்று பிடித்து விசாரித்தனர். அப்போது, பாஸ்கரனை கொலை செய்ததை கணேசன் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே அவரை போலீஸார் கைது செய்தனர்.

பாஸ்கரனை கொலை செய்தது குறித்து போலீஸாரிடம் கணேசன் கூறியதாவது:

நான், விருகம்பாக்கம் பகுதியில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருகிறேன். சினிமா படங்களுக்கு கதை எழுதுவதாக கூறி அந்த வீட்டில் வசித்து வந்தேன். முதல் மனைவியை பிரிந்து 2-வது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறேன். கடந்த 7 ஆண்டுகளாக பாஸ்கரனுடன் எனக்கு பழக்கம் இருந்து வந்துள்ளது.

நான், பாலியல் தொழிலாளிகளை வைத்து பாலியல் தொழில் செய்யும் தரகராக இருந்து வருகிறேன். பாஸ்கரன் இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டால் என்னிடம் தெரிவிப்பார். நான், அந்த தொழிலுக்கு புதிதாக வரும் இளம்பெண்கள் மற்றும் துணை நடிகைகளுடன் பாஸ்கரன் உல்லாசம் அனுபவிக்க ஏற்பாடு செய்து கொடுப்பேன். இதற்காக அவருக்கு நட்சத்திர ஓட்டலில் அறைகளையும் ஏற்பாடு செய்து கொடுப்பேன். சில நேரங்களில் என் மனைவி மற்றும் மகன் இல்லாதபோது எனது வீட்டுக்கே பாஸ்கரனையும், அழகிகளையும் வரவழைத்து உல்லாசத்துக்கு ஏற்பாடு செய்வேன். அதற்குண்டான தொகையை பாஸ்கரனிடம் இருந்து பெற்றுக்கொள்வேன்.

கடந்த 2-ந் தேதி 2 இளம்பெண்கள் புதிதாக வந்திருப்பதாக பாஸ்கரனிடம் தெரிவித்தேன். உடனே அவரும் ஏ.டி.எம். மையத்தில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு எனது வீட்டுக்கு வந்தார். ஆனால் அழகிகள் இருவரும் வர தாமதம் ஆனது. இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கரன், எதற்காக இன்னும் அழகிகள் வரவில்லை. அவர்கள் உடனே இங்கு வர வேண்டும் என்று கூறி என்னிடம் தகராறு செய்தார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் முற்றி இருவரும் மாறி, மாறி சட்டையை பிடித்துக்கொண்டு தகராறு செய்தோம். அப்போது எனது குடும்பம் குறித்தும், என்னை பற்றியும் பாஸ்கரன் தகாத வார்த்தைகளால் பேசியதால் ஆத்திரம் அடைந்த நான், அவரை பிடித்து கீழே தள்ளினேன். இதில் கீழே விழுந்த பாஸ்கரன், தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மேலும் ஆத்திரம் அடங்காததால் நான், வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் பாஸ்கரன் தலையில் பலமாக தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தேன். இதையடுத்து அவரது கை, கால்கள் மற்றும் வாயை துணியால் கட்டினேன். பின்னர் அவரது உடலை கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் சுற்றி கயிறால் கட்டினேன். நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் அவரது உடலை தோளில் தூக்கிச்சென்று சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள கூவம் ஆற்றின் கரையோரம் வீசிவிட்டு சென்றேன். ஆனாலும் போலீசார் என்னை பிடித்து கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பாஸ்கரனை இரவு 7.30 மணி அளவில் கணேசன் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை பிளாஸ்டிக் பையில் கட்டி வைத்து, ஆட்கள் நடமாட்டம் குறைந்த பிறகு வெளியே கொண்டு சென்று வீசலாம் என நினைத்து உடலை வீட்டிலேயே மறைத்து வைத்தார். சுமார் 7 மணி நேரத்துக்கு பிறகு அதிகாலை 2.30 மணி அளவில் பாஸ்கரன் உடலை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று வீசி உள்ளார். மேலும் தகராறு ஏற்பட்ட போது இருவரும் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கைதான கணேசனிடம் இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Read previous post:
0a1a
“புது தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு வருவது ஆரோக்கியமான விஷயம்!” -‘ஷூ’ படவிழாவில் பாக்யராஜ்

Netco Studios சார்பில் நியாஷ் & கார்த்திக் மற்றும் ATM Productions T மதுராஜ் நிறுவனங்கள்   தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில்  யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் திரில்லர்

Close