சுவாதி கொலையில் நிரபராதியை குற்றவாளி ஆக்குகிறதா காவல்துறை?: கருணாநிதி கேள்வி!

சுவாதி கொலை விவகாரத்தில், காவல்துறை அவசரம் காரணமாக, வெகுவிரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விட்டோம் என்று சொல்லி மார்தட்டிக் கொள்வதற்காக, நிரபராதிகளைக் குற்றவாளிகளாக ஆக்குகிறார்களா? என்று பரவலாக சந்தேகம் எழுந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி – பதில் வடிவ அறிக்கை:

கேள்வி:- நுங்கம்பாக்கம் புகைவண்டி நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் பற்றியும், அவருக்கு கழுத்தில் உள்ள காயங்கள் பற்றியும் முரண்பட்ட செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றனவே?

பதில்:- தமிழகக் காவல் துறையின் செயல்பாடுகள் பற்றி தற்போதெல்லாம் இப்படிப்பட்ட முரண்பாடான செய்திகள்தான் தொடர்ந்து வந்து கொண்டுள்ளன. “நம்ம அடையாளம்” என்ற இதழுக்கு ராம்குமாரின் தந்தை பேட்டி கொடுத்து இந்த வாரம் வெளிவந்துள்ளது. அதில், ‘ராம்குமார் தானாக கழுத்தை அறுத்துக் கொள்ளவில்லை, கழுத்தை அறுத்தது போலீஸ்தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், “என் புள்ள கழுத்தை அறுத்தது போலீஸ்தான். எனக்கு நல்லாத் தெரியும். செய்யாத குத்தத்துக்கு என் புள்ளய பிடிச்சிட்டு போயிட்டாங்க. அவன் பேசினா, கொல பண்ணலன்னு சொல்லியிருப்பான். கேஸ முடிக்க என் புள்ளய பிடிச்சிட்டுப் போயிட்டாங்க” என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் அவர்களும், “ராம்குமாருக்கும் சுவாதி கொலைக்கும் தொடர்பு இல்லை என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதை நீதிமன்றத்தில் சொல்வேன்” என்று கூறி வருகிறார்.

காவல்துறை அவசரம் காரணமாக; வெகு விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விட்டோம் என்று சொல்லி மார்தட்டிக் கொள்வதற்காக; நிரபராதிகளைக் குற்றவாளிகளாக ஆக்குகிறார்களா என்று பரவலாக எழுந்துள்ள சந்தேகத்திற்கு விடையளிக்க வேண்டியவர்கள் காவல் துறையினர்தான்.

நமக்கு இருக்கும் கவலையெல்லாம் “நூறு குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிட்டாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது” என்பதுதான்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.