பட்டதாரி – விமர்சனம்

வழக்கமான கதையை வித்தியாசமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் சங்கர் பாண்டி. எஸ்.எஸ்.குமரன் வழக்கம் போல இசையமைப்பில் தூள் பரத்தியிருக்கிறார்.

நாயகன் அபி சரவணன் பட்டப்படிப்பை முடித்துவிட்டு , தமிழ் சினிமா நாயகனுக்கு உரிய இலக்கணப்படி, வேலைவெட்டிக்குப் போகாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக ஊர் சுற்றித் திரிகிறார். இவருக்கு பெண்களை கண்டாலே அலர்ஜி. இதனால் பெண்களுடன் பழகுவதை வெறுத்து ஒதுங்கியிருக்கிறார். ஆனால், இவரது நண்பர்களோ பல பெண்களிடம் பேசி வருகிறார்கள்

நாயகன் அபி சரவணனின் இந்த இயல்பு, நாயகி அதிதிக்கு பிடித்துப்போகிறது. அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஆனால் அபி சரவணனோ அதிதியின் காதலை ஏற்க மறுக்கிறார். ஆனாலும் அதிதி விடாமல் காதலுடன் துரத்துகிறார். இந்நிலையில், தனது அப்பாவின் அறிவுரையை ஏற்று, ஓட்டல் ஒன்றை தொடங்குகிறார் அபி சரவணன்.

அபி சரவணன் பெண்களை வெறுக்க காரணம் என்ன? அவரது மனதை அதிதி மாற்றி காதலிக்க வைத்தாரா? ஓட்டல் தொடங்கிய அபி சரவணன் அதை வெற்றிகரமான நடத்தினாரா? என்பது மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அபி சரவணன், முந்தைய படங்களைவிட இதில் நடிப்பில் கொஞ்சம் தேறியிருக்கிறார். ஒரு சில இடங்களில் வெளிப்படும் செயற்கையான நடிப்பை தவிர்த்திருக்கலாம்.

நாயகிகளாக அதிதி, ராஷிகா நடித்திருக்கிறார்கள். கொடுத்த வேலையை அதிதி பொறுப்புடன் செய்திருக்கிறார். ராஷிகா நடிப்பதற்கு அதிக அளவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து ஓரளவு சிறப்பாக நடித்திருக்கிறார். முயற்சித்திருக்கிறார். அதிதி கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் மகாநதி சங்கர், அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அபி சரவணனின் நண்பர்களில் ஒருவராக வரும் அம்பானி சங்கர் கவனத்தை ஈர்க்கிறார்.

வழக்கமான கதையை வித்தியாசமாக சொல்ல முயற்சி செய்துள்ள இயக்குனர் சங்கர் பாண்டி, திரைக்கதையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். காமெடி பெரியதாக எடுபடவில்லை. அடுத்து என்னென்ன காட்சிகள் வரும் என்று யூகிக்க கூடிய வகையில் காட்சிகளை நகர்த்திச் சென்றுள்ளார்.

படத்திற்கு மிகப் பெரிய பலம் எஸ்.எஸ்.குமரனின் இசை. இவரது இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். சூரியனின் ஒளிப்பதிவும் படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.

‘பட்டதாரி’ – ஜஸ்ட் பாஸ்!

#Pattathari #Review #PattathariReview #SankarPandi #SSKumaran #AbiSaravanan