“இயக்குனர்களை இயக்குவது சுலபம் அல்ல”: கே.பாக்யராஜ் பேச்சு! 

மனிதனின் அன்றாட வேலைப்பளுவை குறைக்கும் நோக்கத்தில் கத்தி உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய காலத்தில் அது திருடுவதற்கும், ஒருவரை கடத்துவதற்கும், இன்னும் பல குற்றச் செயல்களுக்கும்  பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், நாம் யாரும் முழுமையாக தெரிந்து கொள்ளாத கத்தியின் மறுபுறம்  இருக்கிறது. அதுதான் சிகை அலங்கார கலைஞர்களின்  சவரக்கத்தி.

அத்தகைய சவரக்கத்தியை மையமாகக்கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் தான், மிஷ்கின் கதை எழுதி, ‘லோன் உல்ப் புரொடக்ஷன்’ சார்பில்  தயாரித்து இருக்கும் ‘சவரக்கத்தி’. ஜி.ஆர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சவரக்கத்தி’யில் இயக்குனர் ராம் மற்றும் பூர்ணா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவெடுத்து இருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களான இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பா.ரஞ்சித், தியாகராஜா குமாரராஜா, பாலாஜி சக்திவேல், சசி, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நடிகர்கள் நாசர், பிரசன்னா, செல்வா, மற்றும் எஸ்விஆர், தமிழச்சி தங்கப்பாண்டியன், மருது, பாவா செல்லதுரை உள்ளிட்டோருடன் படக்குழுவினரும் கலந்துகொண்டார்கள்.

“ஞானத் திமிர் தான் ஒரு உண்மையான கலைஞனுக்கு அடையாளம். அப்படிப்பட்ட ஒரு உன்னதமான கலைஞன் மிஷ்கின். அவருடைய படங்கள் யாவும் நம் மனதில் ஆழமாக பதியுமாறு தான் இருக்கும். அந்த வகையில் ‘சவரக்கத்தி’ திரைப்படமும்  மிஷ்கினின் அடுத்த ஒரு அற்புதமான படைப்பாக இருக்கும்” என்றார் நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர்.

“பொதுவாகவே மக்கள் இரண்டு இடங்களில் உலக அரசியல் பற்றியும், உலக செய்தியை பற்றியும் காரசாரமாக விவாதிப்பார்கள். ஒன்று ஐ.நா.சபை, மற்றொன்று முடி திருத்தகம். இப்படிப்பட்ட ஒரு தனித்துவமான கதைக்களம் எப்படி மிஷ்கினின் சிந்தனையில் உதயமானது என்று எனக்கு வியப்பாக இருக்கிறது. இயக்குனர்களை இயக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால், இரண்டு இயக்குனர் சிகரங்களை வைத்து ‘சவரக்கத்தி’ படத்தை இயக்கி இருக்கும் ஜி.ஆர் ஆதித்யாவுக்கும், ஒட்டுமொத்த ‘சவரக்கத்தி’ படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்” என்றார் இயக்குனர் கே.பாக்யராஜ்.

“நான் என்னுடைய சிறுவயதில் பார்த்த ‘பிச்சை’ என்னும் சிகை அலங்கார கலைஞரின் வாழ்க்கை கதை தான் இந்த ‘சவரக்கத்தி’. இந்த படத்தில் நடித்த ராம் மற்றும் பூர்ணா ஆகிய இருவருமே தங்களின் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்திருக்கின்றனர்.  என்னை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் அழகான ஆண் யார் என்று கேட்டால் அது ராம் என்று தான் சொல்வேன். அதேபோல், கேரளாவில் இருந்து உதயமான கதாநாயகிகளில், தன்னுடைய குரலுக்கு தானே தமிழில் டப்பிங் செய்த முதல் கதாநாயகி பூர்ணா. அவர்கள் இருவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். முதல்முறையாக ஒரு நகைச்சுவை கதையை நான் எழுதி இருக்கிறேன். நிச்சயமாக ரசிகர்களின் பாராட்டுகளை பெறும் திரைப்படமாக ‘சவரக்கத்தி’ இருக்கும்” என்றார் ‘சவரக்கத்தி’ படத்தின் எழுத்தாளரும், தயாரிப்பாளருமான மிஷ்கின்.