சவூதி அரேபியாவில் இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

சவூதி அரேபியாவில் மன்னராட்சி நடக்கிறது. தற்போது இந்த நாட்டை சல்மான் என்ற மன்னர் ஆண்டு வருகிறார். இவரது அரச குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் கபீர். இளவரசர் அந்தஸ்து கொண்டவர். மன்னர் சல்மானுக்கும் இளவரசர் கபீருக்கும் தாத்தா – பேரன் உறவுமுறை.

2012ஆம் ஆண்டு இளவரசர் கபீருக்கும், அவருடைய நண்பரான மகிமத் என்பவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மகிமத்தை இளவரசர் கபீர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டார்.

இது தொடர்பாக இளவரசர் கபீரை சவூதி அரேபிய காவல்துறை கைது செய்து, சவூதி ரியாத் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது.  நீதிமன்ற விசாரணையில், கொலைக்குற்றம் நிரூபணம் ஆனது. கொலை குற்றத்திற்கு குர்ஆனும், நபிவழியும் மரண தண்டனை விதிக்குமாறு கூறியுள்ளதால், இளவரசர் கபீருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து 2014ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

“மன்னர் குடும்பத்தை சேர்ந்த இளவரசருக்கு மரண தண்டனை” என்ற பரபரப்பான சூழலில், இறுதியாக, மன்னர் சல்மானிடம் கொலை குற்றவாளியை மன்னிக்குமாறு குடும்பத்தின் சார்பில் மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டது.

ஆனால் மன்னர் சல்மானோ, “நான் இந்த நாட்டிற்கு மன்னராக இருப்பதாலோ, கொலையாளி என்னுடைய பேரன் என்பதாலோ கொலை குற்றவாளியை மன்னிக்க முடியாது. ‘கொலைக்கு கொலை’ என்ற அல்லாஹ் சட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது” என்று திட்டவட்டமாக அறிவித்து மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்து இளவரசர் கபீருக்கு மரண தண்டனையை உறுதி செய்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று (18.10.16) இளவரசர் கபீருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பாக சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இளவரசர் கபீர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். எனவே சவூதியில் நீதியை நிலைநாட்ட அல்லாஹ் பரிந்துரைத்த விதிகளின்படி நடவடிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது” என கூறப்பட்டுள்ளது.

இளவரசர் கபீருக்கு எவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது பற்றி அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. சவூதியைப் பொறுத்தவரை, வாளால் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

சவூதியில் 2016ஆம் ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 134வது நபர் இளவரசர் கபீர் ஆவார். தீவிரவாத குற்றச்சாட்டின்பேரில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரே நாளில் 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு மொத்தம் 158 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத் தகுந்தது..

பொதுவாக, சவூதி அரேபியாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரிதிலும் அரிதாகவே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் 1975ஆம் ஆண்டு சவூதி மன்னர் ஃபைசலை கொலை செய்த குற்றதுக்காக, ஃபைசலின் சகோதரர் மகன் ஃபைசல் பின் முசைத் அல் சவுத் என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.