“ஜெயலலிதாவின் ஒப்புதலுடன்” அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த (நவம்பர்) மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 26ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 2ஆம் தேதி முடிகிறது.

வேட்பு மனுத்தாக்கல் தொடங்க இன்னும் 8 நாட்களே உள்ளன. தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை யார் முடிவு செய்து அறிவிப்பார் என்ற கேள்வி எழுந்தது.

இது குறித்து அதிமுக ஊடகத் தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி கூறுகையில், ‘‘தற்போது முதல்வர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் அறிவுரைப்படி இன்னும் கொஞ்ச நாட்கள் அவர் மருத்துவமனையிலேயே தங்கியிருப்பார். விரைவில் வீடு திரும்புவார். அ.தி.மு.க வேட்பாளர்களை முதல்வர்தான் முடிவு செய்து அறிவிப்பார்’’ என்றார்.

அ.தி.மு.க.வின் மற்றொரு ஊடகத் தொடர்பாளர் கோ.சமரம் கூறுகையில், ‘‘வேட்பாளர்களை முதல்வர்தான் முடிவு செய்து அறிவிப்பார். அவரை மீறி எதுவும் நடக்காது’’ என்றார்.

இந்நிலையில் தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்களை அ.தி.மு.க. தலைமைக் கழகம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. “இந்த வேட்பாளர்கள் அனைவரும் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் ஒப்புதல் பெற்று அறிவிக்கப்பட்டுவதாக” அது கூறியுள்ளது.

அதன்படி, தஞ்சாவூர் தொகுதியில் எம்.ரங்கசாமி, அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்

தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் ஏற்கெனவே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கே அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக முன்பு இருந்த ஏ.கே.போஸூக்கு தற்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் போட்டியிடுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.