தமிழகத்தில் 400 ஆண்டுகளாக நடக்கிறது சாதி ஆணவக்கொலை!

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடைபெறுவது தொடர்பான ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் சமூக ஆர்வலர் பேராசிரியர் கல்யாணி பேசினார். “கொஞ்சி வளர்த்த குழந்தையை வெட்டிக் கொல்ல எப்படித்தான் மனசு வருகிறதோ? ஆணவக் கொலைக்குக் காரணமான உணர்வின் வேர் எங்கெல்லாம் பரவிக் கிடக்கிறதோ? இதைப் பூண்டோடு அழிக்க முடியாதா?” என்று அதில் நெகிழ்ந்துருகினார். இது கணிசமான மக்களின் மனதில் இருக்கும் உணர்வுதான். சில ஊடகங்களும் சிற்றிதழ்களும் இத்தகைய கொலைகள் சமீபத்தில் உருவானது மாதிரியான பிம்பத்தை வெளிப்படுத்துகின்றன. அது சரியானதல்ல. இந்தக் கொடுமைகளுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது.

பிரச்சினையின் ஆழத்தை மேலோட்டமாகப் புரிந்துகொண்டால் அதைத் தீர்க்க முடியாது. ஒடுக்கப்பட்ட பெண் அல்லது ஆண், சாதி அடுக்குகளில் அவர்களைவிட ஒருபடி மேலே உள்ள பெண் அல்லது ஆணைக் காதலிப்பார்கள். கல்யாணம் செய்துகொள்வார்கள். அதனால் கொல்லப்படுவார்கள். காலப்போக்கில் வணங்கப்படும் தெய்வங்களாகவும் மாறுவார்கள். இந்தக் கொடுமையான போக்கு சுமார் 400 ஆண்டுகளாகத் தமிழகத்தில் செயல்படுகிறது என்று சொல்லலாம். இதற்கு மக்களிடம் நிலவும் கதைப் பாடல்களே சான்று.

தீட்டுச் சடங்குக் கொலை

ஒடுக்கப்பட்ட பெண் அல்லது ஆண், பிற்படுத்தப்பட்ட சாதியினருடன் மண உறவு கொள்வதைத் தடுக்க வேண்டுமானால், அந்த ஆண் அல்லது பெண்ணைக் கொல்ல வேண்டும் என்ற கருத்தைத் தெளிவாகவே சொல்கின்றன தென் மாவட்டக் கதைப் பாடல்கள். திட்டமிட்டுச் செய்யப்படுகிறது கொலை! இதைச் செய்ய ஆலோசனைக் கூட்டங்கள் வேறு! ஆணவக் கொலை செய்தவர்கள் அரசாலோ மனிதர்களாலோ தண்டிக்கப்பட்டதாகக் கதைப் பாடல்களில் சான்று இல்லை! அரசும் இதை அனுமதிக்கும். தற்போதைய நவீன ஊடகங்கள் ‘ஆணவக் கொலைகள், கவுரவக் கொலைகள்’ என்று பெயர் வைத்துள்ளன. ஆனால், காணிச் சாவு என்ற கதைப் பாடல் ‘தீட்டுச் சடங்குக் கொலை’ என்கிறது.

கதைப் பாடல்களில் தென் மாவட்டங்களில் வில்லிசைப் பாடல்கள், நாட்டார் நிகழ்த்துக் கலையான கணியான் ஆட்டத்தின் கதைப் பாடல்கள் உள்ளன. நிகழ்த்துக் கலையின் கதைப் பாடல்களாக அல்லாமல் தனிக் கதைப் பாடல்களும் உள்ளன. இவற்றில் தமிழகத்தில் ஆணவக் கொலைகள் 16-ம் நூற்றாண்டிலும் நடந்துள்ளன என்பதற்கான சான்றுகள் உள்ளன. பொதுவாக, இவை தென் தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட கதைப் பாடல்கள்தான். ஆனாலும், மொத்தத் தமிழ்நாட்டுக்கும் பொருந்துபவை. இவற்றில் முக்கியமானவை சிதம்பர நாடார் கதை, தோட்டுக்காரி அம்மன் கதை, பூலங்கொண்டாளம்மன் கதை, காத்தவராயன் கதை, மதுரை வீரன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, வன்னியடி மறவன் கதை ஆகியன. இவை அச்சிலும் வந்துள்ளன. காணிச் சாவு, அனந்தாயி கதை, முத்தளமாரி கதை என வேறு கதைகளும் ஏட்டு வடிவில் எழுத்தேறி உள்ளன. இவை எல்லாமே சாதி காரணமாக – திருமண மறுப்பு காரணமாகக் கொல்லப்பட்டவர்களைப் பற்றியவை.

முத்துப்பட்டன் கதையும் காத்தவராயன் கதையும் ஒரே போக்கில் அமைந்தவை. பட்டன் அந்தண குலத்தவர். ஒடுக்கப்பட்ட பகடை குலப் பெண்களை மணம் செய்கிறார். காத்தவராயன் ஒடுக்கப்பட்ட சாதியினர். ஆர்யமாலா என்ற பிராமணப் பெண்ணை மணக்கிறார். இரண்டிலும் முடிவு ஒன்றுதான். முத்துப்பட்டன் ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுடன் கொண்ட காதலைப் பற்றித் தன் சகோதரர்களுக்குக் கூறியதும் அவர்கள், அவரைப் பாதாள அறையில் அடைத்துவிட்டனர். பட்டன் தப்பிச் சென்று அந்தப் பெண்களை மணக்கிறார். பின் கொல்லப்படுகிறார். தான் காதலித்த பெண்களின் தந்தையிடம் பட்டன் தனது விருப்பத்தைச் சொன்னபோது தந்தை, “நீ என் சாதிக்கு மாறி விடு; உன் அடையாளத்தை இழந்துவிடு” என்கிறார். பட்டன் அப்படியே செய்கிறார். பிராமண அடையாளத்தை அவர் இழந்த பிறகே திருமணம் நடக்கிறது. முற்படுத்தப்பட்ட சாதி அடையாளத்திலிருந்து ஒடுக்கப்பட்ட சாதி அடையாளத்தை ஏற்றுக்கொள்வது என்ற நிகழ்வு, இந்தக் கதைப் பாடலில் மட்டுமே வருகிறது.

காத்தவராயனின் கதையோ நேரெதிர். ஒடுக்கப்பட்ட சாதியினரான காத்தவராயன், பிராமண குல ஆரியமாலாவை மணக்க முயன்று கழுவேற்றப்படுகிறார். இந்த நிகழ்வு இன்றும் சிறிது மாறுபட்ட வடிவத்தில் சடங்கு சார்ந்த நாடகமாக நடிக்கப்படுகிறது. மரபை மீறுபவர்களுக்குரிய தண்டனை இது என்பதை இச்சடங்கு காட்டுகிறது. இன்றைய ஆணவக் கொலைகளின் வேர்களை இதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து நாம் தேட முடியும்.

குழந்தைத் திருமணம்

பாம்பு கடித்து இறந்து, சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்ட பிராமண இளம் பெண்ணுக்குத் தன் மந்திரத்தால் உயிர் கொடுக்கிறார் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த சிதம்பரம். அவள் விரும்பியதால் அவளை மணக்கிறார். இது ஊருக்குள் தெரியவருகிறது. சிதம்பரம் கொல்லப்படுகிறார். ஊர் நிர்வாகிகளுக்கு இதில் பங்கு உண்டு.

குறுநிலத் தலைவரான சின்னான் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். மாபெரும் வீரர். உறவினர்கள் இவருக்குப் பருவமடையாத சொந்தச் சாதிப் பெண்ணை மணம் செய்து வைக்கின்றனர். அவர் அவளை மணக்க மறுத்தபோது “உன் மனைவி பருவமடையும் காலம் வரும் வரை ஒரு வைப்பாட்டி வைத்துக்கொள்ளலாம்; இழிகுலம் ஆனாலும் பரவாயில்லை; அதுதான் வழக்கம்” என்கின்றனர். சின்னான் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொள்கிறார். அவரது மனைவி பருவமடைந்த செய்தி வருகிறது. ஆனால், “வைப்பாட்டியே என் மனைவி” எனப் பிரகடனம் செய்கிறார். ஊர் கூடி சின்னானைக் கொல்லத் திட்டமிடுகிறது. அரசரும் அனுமதி கொடுக்கிறார். உறவினர்கள் உதவியுடன் சின்னான் கொல்லப்படுகிறார்.

வேறுபட்ட சாதிகள் கலந்துவிடக் கூடாது என்பதில் குறுநில மன்னர்களும் கவனமாக இருந்தார்கள் என்கின்றன கதைப் பாடல்கள். பிற்காலப் பாண்டியனான குலசேகரனுக்குத் தன் மகளைக் கொடுக்க விரும்பிய கன்னட அரசரிடம் பாண்டியன் “முன்பிருந்த பாண்டியர்கள் மூதாக்களான பேர்கள் கன்னடியன் கிளைதனில் கல்யாணம் செய்ததுண்டோ?” என்று கேட்கிறார். கன்னடியன், பாண்டியனை உயிருடன் பிடித்தபோது, சாதிக் கலப்பு விரும்பாத குலசேகரன் குறுவாளால் தன்னை மாய்த்துக்கொண்டாராம். இன்றும் இது ‘அடுகச்சி முடுகச்சி வடுகச்சி கல்யாணம்’ என்று மக்களிடம் கதையாகப் புழங்குகிறது. ஐவர் ராசாக்கள் கதை கூறும் செய்தி இது.

வெங்கலராசன் கதை சற்றே வேறுபட்டது. வலங்கை வம்சத்து வெங்கலராசன் மகளைத் திருவிதாங்கூர் அரசர் விரும்பினார். வெங்கலராசன் மறுத்தார். திருவிதாங்கூர் அரசர் அவளைச் சிறைப்பிடிக்க வந்தபோது, வெங்கலராசன் தன் மகளின் கழுத்தை அறுத்து வீதியில் எறிகிறார் என்று சொல்கிறது அது! இந்தக் கதை புத்தகமாக வந்துள்ளது.

மந்திரமூர்த்தியின் மரணம்

தடிவீரய்யன் கதை இன்னும் வேறுபட்டது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே துணி வெளுக்கும் இனத்தைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி. அவர் தனது சாதி இல்லை என்றாலும், வேறொரு பிரிவைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்ணைத்தான் மணந்தார். ஆனாலும், நாயக்க மன்னரின் நெல்லைப் பிரதிநிதியால் கொலை செய்யப்படுகிறார்.

ஒடுக்கப்பட்ட சாதிகளின் உட்பிரிவுகளில்கூட மணம் செய்யத் தடை இருந்ததற்கு வேறுசில கதைப் பாடல்களிலும் சான்றுகள் உண்டு.

காணி பிற்படுத்தப்பட்ட சாதியினர். ரகசியமாய் ஒடுக்கப்பட்ட பெண்ணை மணந்து வாழ்கிறார். குழந்தையும் பிறக்கிறது. அந்தக் குழந்தைக்குப் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் மரபுப்படி கல்வி கற்பிக்க ஆசிரியரைத் தேடுகிறார். ஊர் மக்கள் இதை அறிந்து ஒன்று கூடுகின்றனர். காணியைக் கொன்று குழந்தையைக் காளி கோயிலுக்குக் கொண்டு செல்கின்றனர். குழந்தையின் தலையை வெட்டி ஒரு ஈட்டியில் குத்தி வைக்கின்றனர். இந்தக் காணிச் சாவு கதைப் பாடல் இன்னும் அச்சில் வரவில்லை.

எல்லாக் கதைப் பாடல்களிலும் ஒரு பொதுவான தன்மையைப் பார்க்கலாம். சாதி தாண்டி நடந்த மணம் காரணமாகக் கொலை செய்யப்பட்டவர்கள் எல்லாம் இறந்தபின் கயிலாயம் செல்வார்கள். சிவனிடம் வரம் வாங்குவார்கள். பின்னர், தன்னைக் கொன்றவர்களைப் பழிவாங்குவார்கள். இதன்பிறகு, கொலை செய்த சாதியினர் தங்களால் கொல்லப்பட்டவர்களை வழிபடுவார்கள்! ஒடுக்கப்பட்ட சாதியில் மண உறவு வைத்தவர் கொல்லப்படும்போது, கொன்றவர்களைத் தண்டிக்கக் கயிலை சிவனே வரம் கொடுப்பதாக இந்தக் கதைப் பாடல்களைப் பாடுபவர் உணர்ச்சியுடன் வர்ணிக்கிறார். கயிலை சிவனின் இடத்தில் இப்போது நீதியும் காவல் துறையும் இருக்கின்றன. கதைதான் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அ.கா. பெருமாள்

நாட்டுப்புறவியலாளர், ‘சடங்கில் கரைந்த கலைகள்’, ‘சிவாலய ஓட்டம்உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

(மேலே உள்ள கட்டுரை ‘ஆணவக் கொலைகளின் வேர்கள்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டது.)

Courtesy: tamil.thehindu.com