சாதிவெறியன்களின் பதிவுகளை தேடித்தேடி பதிலடி கொடுங்கள்!

சாதிவெறிக்கு எதிராக அனைத்து முற்போக்கு இயக்கங்களும் ஒன்றுபட்டு போராட்டத்தினை துவக்குவோம். நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்டு எதிராக திரள்வோம். ஒன்றுபட்டு நின்று இச்சீரழிவு ஆற்றல்களை தனிமைப்படுத்துவோம். மூத்த இயக்கத் தோழர்கள் இதற்கான முயற்சியை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோம்.

இதேநேரம் சாதிவெறியை, சாதியப்பற்றினை முகநூலில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஆதரித்தும், போற்றியும் எழுதுபவர்களுக்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்யுங்கள்..

பொதுவாக, நாம் ’சாதியத்தினை எதிர்த்த பதிவுகளை’ இடும்போதெல்லாம் மிகக் கீழ்த்தரமான பதிவுகளைச் செய்தும், கொச்சைபப்டுத்தியும் விவாதத்தினை திசை திருப்பும் இந்த சாதிப் பொறுக்கிகளை முகநூலில்கூட நம்மால் எதிர்த்து தடுத்து நிறுத்த முடியாமல் போகும்பட்சத்தில், எதை நாம் களத்தில் சாதிக்க முடியும்? முகநூலில் நேரத்தினை செலவு செய்ய வாய்ப்பிருக்கும் தோழர்கள் இந்த பங்களிப்பினைச் செய்யுங்கள்.

எத்தனைதூரம் கீழ்த்தரமாக அவர்கள் நடந்து கொண்டாலும், உங்களது எதிர்ப்பினை வலுவாக பதிவு செய்யுங்கள். முகநூலில் இருந்து வெளியேற்றுங்கள். இந்த சீரழிவு சக்திகளுக்கு முகநூல் ஒரு பரப்புரையாகவும், வெட்டிபெருமை பேசும் தளமாகவும் இருப்பதை தடுக்கவாவது உதவுங்கள்.

சாதிவெறியன்களின் பதிவுகளை தேடித்தேடி பதிலடி கொடுங்கள். அவர்களது பதிவுகளை முடக்குங்கள். வெளிப்படையாக செயல்படும் அவர்களது திமிரை அடக்குவோம். பல முற்போக்கு இயக்கத் தோழர்களின் செய்திகளை கொச்சைப்படுத்தி பரப்புரை செய்து சாதிவெறியை பரப்புகிற இந்த விலங்குகளை தடுத்து வெளியேற்றுவோம். இளம் தலைமுறையினர் இந்த கும்பல்களின் பரப்புரையில் சிக்கி சீரழிவதையாவது தடுக்க முயல்வோம். முகநூலை இவர்களது பெருமையை பேசும் இடமாக பயன்படுத்துவதை தகர்க்க உதவுங்கள். முகநூலில் மட்டுமே செயல்படும் பல தோழர்கள் இதை துவக்குங்கள்…

உங்களை கொச்சைப்படுத்தி வெளியேறச்செய்யும் முயற்சிகளை முறியடித்து எதிர்கொள்ளுங்கள். இனிமேல் ஒதுங்கிச் செல்வது இயலாது எனும் மனநிலையில் இவர்களை எதிர்கொள்ளுங்கள்.

விலங்கினை அடக்கும்போது திமிறச் செய்யும். நம்மை கடித்துக் குதற பாயும். அதையும் மீறி அதன் கழுத்தில் மிதித்து, வெறிபிடித்த நாயின் வாயை அடக்க இயலும்.

துவக்குவோம்.

 – திருமுருகன் காந்தி

மே 17 இயக்கம்