ரூபாய் நோட்டு தட்டுப்பாடு: பல தமிழ் படங்களின் ரிலீஸ் தேதி மாற்றம்!

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நரேந்திர மோடி திடீரென அறிவித்ததால் ஏற்பட்டுள்ள ரூபாய் நோட்டு’ தட்டுப்பாடு காரணமாக பல தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கடவுள் இருக்கான் குமாரு

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்திருக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ திரைப்படம் முதலில் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரூ.500, ரூ.1000 செல்லாது என நவம்பர் 8ஆம் தேதி நரேந்திர மோடி திடீரென அறிவித்ததால் ஏற்பட்ட ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக நவம்பர் 17ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு நாள் தள்ளி, நவம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறித்து இயக்குநர் ராஜேஷ் கூறுகையில், “இப்படம் 18ஆம் தேதி வெளியாக முக்கிய காரணம் இப்போது மக்கள் சந்தித்து வரும் பண பிரச்சினைதான். எல்லோரும் எங்களிடம் படத்தை வருகிற வெள்ளிக்கிழமை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டனர். ‘கடவுள் இருக்கான் குமாரு’ வெளியாகும்போது மக்கள் அதை மகிழ்ச்சியுடன் பார்த்து ரசிக்க ஏதுவாக இருக்கும்.

இப்படம் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகுகிறது. இது பெரிய நடிகர்களுக்கு நிகரான ஒரு வெளியீடாகும். ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ஒரு திரைப்படம் 400 திரையரங்குக்கு மேல் வெளியாவது இதுவே முதல்முறை” என்றார்..

சைத்தான்

ப்ரதீப் இயக்கத்தில் விஜய் ஆண்டணி நடித்திருக்கும் ‘சைத்தான்’ முதலில் நவம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால், வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவலை வேண்டாம்

டி.கே இயக்கத்தில் ஜீவா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம். தீபாவளி வெளியீடாக இருந்த இப்படம், நவம்பர் வெளியீடாக மாற்றப்பட்டது. ஆனால் ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் சரியான வெளியீட்டுத் தேதிக்கு காத்திருந்தது. தற்போது பல்வேறு படங்கள் பின்வாங்கியதால், நவம்பர் 24ஆம் தேதி தங்களுடைய வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளது இப்படக்குழு..

கத்தி சண்டை

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கத்தி சண்டை’. முதலில் நவம்பர் 18ஆம் தேதி வெளிவருவதாக இருந்தது. ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடால் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இன்னும் அதிகாரபூர்வமாக வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்கவில்லை. இது குறித்து விஷால் “கத்தி சண்டை வெளியீட்டு தேதி இன்னும் இரண்டு நாட்களில் இறுதி செய்யப்படும். ஆனால் கண்டிப்பாக இந்த மாதம் வெளியீடு இல்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.