“நான் காப்பியடித்த படங்களின் லிஸ்ட்டை டைட்டில் கார்டில் போடுவேன்!” – ‘பலூன்’ இயக்குனர்
70எம்எம் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் கந்தசாமி நந்தகுமார், அருண் பாலாஜி தயாரிக்க, ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி நடிக்க, சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பலூன்’. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆரா சினிமாஸ் மகேஷ் வெளியிடும் இந்த படத்தின் ட்ரெய்லர் சென்னையில் வெளியிடப்பட்டது.
“சினிமாவில் எனது முதல் படம். நண்பர் அருண் பாலாஜி தான் இயக்குனர் சினிஷை எனக்கு அறிமுகப்படுத்தினார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் கதை சொன்னார். அவர் சொன்ன விதம் எனக்கு ரொம்ப பிடித்தது. அவர் ஜெயிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. போஸ்டர் நந்தகுமார் உனக்கு ஏன் தேவையில்லாத வேலை என்றார். ஆனாலும் படத்தை நாங்க ஆரம்பிச்சிடுறோம், எங்களுக்கு உதவி தேவைப்படுறப்போ மட்டும் உதவி பண்ணுங்கனு அவரை கேட்டுக்கிட்டேன். நந்தகுமாரும், தேனப்பனும் எங்களுக்கு நிறைய உதவி செய்தார்கள். நாங்கள் நினைத்த நிறைய விஷயங்கள் தவறி போனாலும், அதை விட நல்ல விஷயங்களே எங்களுக்கு கிடைத்தன” என்றார் தயாரிப்பாளர் கந்தசாமி நந்தகுமார்.
“இந்த படத்தில் நானும் ஒரு தயாரிப்பாளராக இருந்தேன். பின் ஒரு சில காரணங்களால் விலகி விட்டேன். நட்புக்காக என்ன வேணாலும் செய்வான் இயக்குனர் சினிஷ். மிகவும் தன்னம்பிக்கையான மனிதன். தயாரிப்பாளர்கள் நல்லா இருக்கணும்னு நினைக்கக் கூடிய ஒரு இயக்குனர். அந்த எண்ணத்துக்காக இந்த படம் வெற்றி பெறணும்” என்றார் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்.
“முதல் முறையாக ஒரே படத்தில் எல்லா பாடல்களையும் நானே எழுதியிருக்கிறேன். அதற்கு சினிஷ்க்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். முதல் பட இயக்குனருக்கு இவ்வளவு பெரிய படம் அமைவது பெரிய விஷயம். காமெடி, திரில்லர், ரொமான்ஸ் என ஒரு கலவையான படம். நிறைய கஷ்டங்களை தாண்டி தான் இந்த மொத்த படமும் முடிந்திருக்கிறது” என்றார் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ்.
“இந்த படத்தில் எல்லோருக்கும் பேய் மேக்கப் போட்டு, யார் பேய்னு பார்க்கறவங்க எல்லோருமே கேட்கிறார்கள். உண்மையில் பேய் இயக்குனர் சினிஷ் தான். படத்தை கொண்டு போய் சேர்க்க, பேய் மாதிரி வேலை பார்த்தார் சினிஷ்” என்றார் எடிட்டர் ரூபன்.
“பலூன் என்னுடைய முதல் ஹாரர் படம். நிறைய படங்களில் பேசி விட்டு, பின்னர் பெரிய நாயகிகளை ஒப்பந்தம் செய்வார்கள். ஆனால் சினிஷ் உறுதியாக எனக்கு தமிழ் பேசுற நாயகி தான் வேணும் என சொல்லி என்னை ஒப்பந்தம் செய்தார். நல்ல பொழுதுபோக்கு படமாக வந்திருக்கிறது” என்றார் நாயகி ஜனனி.
“நான் இந்த படத்துக்குள் வர முக்கிய காரணம் சினிஷ் தான். போஸ்டர், டீசர்னு ஒவ்வொரு விஷயமும் நல்ல வரவேற்பை பெற்றது. பலூன் படத்துக்கு முந்தைய வாரம் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆகிறது. ஆனாலும் எங்கள் படத்துக்கும் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன். ரிலீஸுக்கு முன்பே பலூன் படத்தின் எல்லா ஏரியாவும் விற்பனை ஆகி விட்டது” என்றார் ஆரா சினிமாஸ் மகேஷ்.
“வேட்டை மன்னன்’ படத்தில் உதவியாளராக வேலை செய்தேன். பின் ஒரு குறும்படம் எடுத்து அதுவும் சொதப்ப, அடுத்து ஒரு கதையோடு தயாரிப்பாளரை தேடி அலைந்தேன். ஞானவேல்ராஜா ஒரு பேய் கதை வேணும்னு கேட்க 30, 40 ஆங்கில படங்களை பார்த்து, ஒரு கதை ரெடி பண்ணி விட்டேன். நான் காப்பியடித்த படங்களின் லிஸ்ட்டை டைட்டில் கார்டில் போடுவேன். பாதி கதை ரெடியான நேரத்தில் கதையை கேட்ட திலீப் சுப்பராயன் படத்துக்கு ஹீரோ, தயாரிப்பாளர்கள் கிடைக்க உதவியாய் இருந்தார். நிறைய பிரச்சினைகள் வந்தன, அதையும் தாண்டி படம் வளர்ந்தது. எனக்கு பாஸிடிவாக கூடவே இருந்தார் ஆரா சினிமாஸ் மகேஷ். நம்மை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்கள் கஷ்டப்படக் கூடாது என்று நினைப்பவன் நான். அதற்கு நடிகர்கள், இயக்குனர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும், படத்தை ஓட வைக்க எல்லா வகையிலும் விளம்பரப்படுத்துவதில் தவறில்லை” என்றார் இயக்குனர் சினிஷ்.
படத்தின் நாயகி அஞ்சலி, கலை இயக்குனர் சக்தி, பேபி மோனிகா, மாஸ்டர் ரிஷி, நடிகர் கார்த்திக் யோகி, தயாரிப்பாளர் அருண் பாலாஜி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.