‘கபாலி’ படத்தை ரஜினி அமெரிக்காவில் ரசிகர்களுடன் பார்க்க ஏற்பாடு?

சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை முடிந்து, அங்குள்ள சச்சிதானந்த சுவாமியின் லோட்டஸ் ஆசிரமத்தில் தற்போது தங்கியிருக்கிறார்.

ரஜினி நடித்த ‘பாபா’ படம் ரிலீசானபோது, அதைப் பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்து சச்சிதானந்த சுவாமி சென்னை வந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் காலமானார். அவரது உடலை விமானத்தில் எடுத்துச் சென்று இறுதிச சடங்குகளில் கலந்துகொண்டார் ரஜினி.

தற்போது அந்த ஆசிரமத்தில் தங்கியிருக்கும் ரஜினி, அங்கு தியானப் பயிற்சிகளைச் செய்து வருகிறார். அவருக்கு உதவியாக மூத்த மகள் ஐஸ்வர்யா அவருடன் இருக்கிறார். ஐஸ்வர்யாவின் மகன்கள் யாத்ரா, லிங்கா இருவரும் பாட்டி லதா ரஜினிகாந்த் பராமரிப்பில் சென்னையில் இருக்கிறார்கள்.

லோட்டஸ் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் ரஜினியும், ஐஸ்வர்யாவும் அங்கிருக்கும் சச்சிதானந்த சுவாமியின் உருவச் சிலையை வணங்கி வழிபட்டார்கள். அப்போது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை ஐஸ்வர்யா தனது ட்விட்டரில் பதிந்துள்ளார். (அந்த படம் தான் கீழே உள்ளது.)

0a2f

இரண்டு வாரங்களுக்கு முன்பு, இளைய ம்கள் சௌந்தர்யா, அப்பாவைப் பார்க்க அமெரிக்கா சென்றபோது, ‘கபாலி’ படத்தின் ஃபைனல் பிரதியை எடுத்துச் சென்றாராம். முழுப் படத்தையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்த ரஜினி, அங்கிருந்து தொலைபேசியில் இயக்குனர் பா.ரஞ்சித், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட ‘கபாலி’ படக்குழுவினரை அழைத்துப் பாராட்டினாராம்.

வருகிற 22ஆம் தேதி உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான திரையரங்குகளில் ‘கபாலி’ வெளியாக இருப்பதால், அதற்கு 2 நாட்களுக்குமுன், அதாவது 20ஆம் தேதி வாக்கில் ரஜினி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதில் மாற்றம் ஏற்படலாம் என்றும் தெரிகிறது.

‘கபாலி’ படம் பார்க்கும் அமெரிக்க ரசிகர்களின் ரியாக்க்ஷனை நேரில் பார்க்க விரும்புகிறாராம் ரஜினி. எனவே, அமெரிக்காவில் ‘கபாலி’ ரிலீஸாக உள்ள திரையரங்கில், ரசிகர்களோடு சேர்ந்து ரஜினி படம் பார்க்க ஏற்பாடு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.