“தண்ணீரை யாரும் வீணாக்க வேண்டாம்; அது தங்கத்தை விட விலை மதிப்புடையது!” – எஸ்.பி.பி.

4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படத்தின் இசையை வெளியிட்டார்.

g9

கூர்கா இதுவரை பார்த்த வழக்கமான நகைச்சுவை படங்கள் போல இருக்காது. வித்தியாசமான படமாக இருக்கும். யோகிபாபு மிகச்சிறந்த நகைச்சுவையை கொடுக்கும் ஆற்றலை உடைய ஒரு நடிகர், சாம் ஆண்டன் நகைச்சுவைக்கென ஒரு தனி மீட்டர் வைத்திருக்கிறார் என்றார் நடிகர் சார்லி.

காமெடியை எப்படி கொடுப்பது என்பதை மிகவும் அறிந்த ஒரு இயக்குனர் சாம் ஆண்டன். யோகிபாபு இரவு பகலாக, தூங்க கூட நேரமே இல்லாமல் கடுமையாக உழைத்து வருகிறார். அவருக்கு கிடைத்த கொஞ்ச நேரத்தில் இந்த படத்தை முடித்து கொடுத்திருக்கிறார். அவருடைய முகம் இந்த படத்தை காப்பாற்றும் என்றார் நடிகர் மனோபாலா.

கூர்கா லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் விநியோகிக்கும் முதல் திரைப்படம். யோகிபாபுவின் வளர்ச்சி படத்துக்கு படம் பெரிதாகிக் கொண்டே போகிறது. சாம் ஆண்டன் இயக்கிய முந்தைய படங்கள் அனைத்துமே பெரிய ஹிட். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும், யோகிபாபுவுக்காக தான் இந்த படத்தையே ரிலீஸ் செய்கிறோம் என்றார் லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர்.

இயக்குனர் சாம் ஆண்டன் யாரிடமும் உதவி இயக்குனராக வேலை பார்த்ததில்லை என சொன்னார். ஆனால் அவர் எடுக்கும் காட்சிகளை பார்த்தால் 20 படங்கள் வேலை செய்த அனுபவம் உள்ள ஒருவர் இயக்குவது போல இருக்கும். எஸ்பிபி சாரை முதன் முறையாக நான் பயணங்கள் முடிவதில்லை பாடல் பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த போது நான் பார்த்தேன். ஒரு பாடலுக்கு என்ன தேவையோ அதை மிகச்சிறப்பாக கொடுப்பார், அவர் இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருப்பது படக்குழுவுக்கே பெருமை. யோகி பாபு சினிமாவிற்கு வர ரொம்ப கஷ்டப்பட்டார், இப்போதும் வேலை காரணமாக தூங்க கூட நேரம் இல்லாமல் கஷ்டப்படுகிறார். எல்லோருக்கும் நல்லவராகவே இருக்கிறார் என்றார் நடிகர் மயில்சாமி.

100 படத்தின் எடிட்டிங் சமயத்தில் ஒரு ஐடியாவை சொன்னார் சாம் ஆண்டன். தயாரிப்பாளர் யார் என கேட்டபோது இந்த புது ஐடியாவை யார் நம்புவாங்க என்ற சந்தேகம் இருந்தது. நாமே தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம், கிஷோர் அண்ணன் முன்வந்தார். யோகிபாபுவிடம் கால்ஷீட் கேட்டபோது ஒரே கட்டமாக 35 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். சிவகார்த்திகேயன், ஜிவி பிரகாஷ்குமார், அருண்ராஜா காமராஜ், விக்னேஷ் சிவன் என பல நண்பர்களும் உதவி செய்தனர். திரையரங்கை விட்டு வெளியில் வரும் அனைவரும் புன்னகையோடு தான் வெளியே வருவார்கள் என்றார் தயாரிப்பாளர் மற்றும் படத்தொகுப்பாளர் ரூபன்.

கனா படத்தொகுப்பின்போது இந்த கூர்கா படத்தில் ஒரு பாடல் நீங்க எழுதணும் என சொன்னார் ரூபன். அது தான் இந்த பாடலை நான் எழுத பிள்ளையார் சுழி. நான் பீட்சா, ஜிகர்தண்டா பாடல்கள் எல்லாம் எழுதி முடித்த நேரத்தில், எனக்கு பாடல்கள் எதுவும் இல்லை. அந்த நேரத்தில் என்னை நம்பி பாடல் வாய்ப்பு கொடுத்தார் சாம் ஆண்டன். அவர் என் மீது வைத்த முதல் நம்பிக்கை தான் என்னை அடுத்தடுத்து நகர உதவியாக இருந்தது. இவர்களை போல நிறைய புதிய தயாரிப்பாளர்கள் வரணும் என்றார் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ்.

ஒரு ஜாலியான படம் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான படம் இது. 34 நாட்களில் படத்தை முடிக்க வேண்டும், நாங்களே தயாரிக்கிறோம் என்றபோது நிறைய சிரமங்கள் இருந்தது. யோகிபாபு யாருக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை எங்களுக்கு கொடுத்திருக்கிறார். ஒரே கட்டமாக மொத்தமாக தேதிகளை கொடுத்தார். ரொம்ப பிஸியாக இருந்தாலும், தனக்கென ஓய்வுக்கு நேரம் ஒதுக்காமல் எல்லா படங்களுக்கும் தேதிகளை கொடுத்து, அவர் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார் என்றார் இயக்குனர் சாம் ஆண்டன்.

ஒரு தயாரிப்பாளரை பற்றி இன்னொரு தயாரிப்பாளர் புகழ்ந்து பேசுவது ஆச்சரியமான, அரிதான விஷயம். இந்த மேடையில் சமூக விஷயங்களை தொடர்ந்து பேசும் மயில்சாமி, சித்தார்த் போன்றோர் இருப்பது மகிழ்ச்சி. ஒரு திரைப்படத்தை அறிவிக்கும்போதே அதை வெளியிடும் வரை திட்டமிடுபவர் சாம் ஆண்டன். இந்த படம் யோகிபாபுவின் நகைச்சுவையால் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் என்றார் இயக்குனர் கரு. பழனியப்பன்.

நண்பர்களாக சேர்ந்து படம் பண்ணுவது என்பது எளிதான விஷயம் அல்ல, என் அனுபவத்தில் சொல்கிறேன். இவர்கள் நல்ல ஒரு திறமையான குழுவை ஒருங்கிணைத்திருக்கிறார்கள். நல்ல திறமையான கலைஞர்கள் பலர் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள். இந்த படத்தில் கலைஞர்கள் பலருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் ராஜ் ஆர்யன் ஒரு வெற்றிப்படத்தில் அறிமுகமாகி இருக்கிறார் என்பது மகிழ்ச்சி என்றார் எஸ்பி சரண்.

தயாரிப்பு நிறுவனத்துக்கு 4 மங்கீஸ் என பொருத்தமான பெயரை தான் வைத்திருக்கிறார்கள். குரங்குகள் என்பவை தான் தங்களுக்குள் ஒத்தாசையாக இருக்கும், அதுபோல இந்த தயாரிப்பாளர்கள் 4 பேருமே சுமையை தங்கள் தோளில் போட்டுக் கொண்டு இந்த படத்தை முடித்திருக்கிறார்கள். இது யோகிபாபுவின் ஸ்பெஷல் திரைப்படம், ஒரு கமெர்சியல் படத்துக்கு என்னென்ன தேவையோ அது எல்லாமே இந்த படத்தில் இருக்கும். யோகிபாபு மற்ற படங்களில் ரொம்ப பிசியாக ஓய்வே இல்லாமல் நடித்து விட்டு இந்த படத்துக்கு வருவார். ஆனாலும் உற்சாகமாக நடித்துக் கொடுப்பார். ஒரே வருடத்தில் இரண்டு படங்கள் ஹிட் கொடுத்த இயக்குனராக சாம் ஆண்டன் இருப்பார் என்றார் நடிகர் ரவி மரியா.

யோகிபாபுவை பார்த்து நான் வியந்திருக்கிறேன், அவர் ஒரு மிகச்சிறந்த ஒரு நடிகர். அவருடன் இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். யோகிபாபு ஓய்வே இல்லாமல் உழைக்கிறார். வெற்றி வந்த பிறகு எல்லோரும் உடல்நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும். அது தான் மிக முக்கியம். இவர்களை போல நிறைய தயாரிப்பாளர்கள் வர வேண்டும், ரிலீஸுக்கு முன்பே லாபகரமான படமாக இது அமைந்திருக்கிறது என்றார் நடிகர் சித்தார்த்.

எனக்கும், சாம் ஆண்டனுக்கும் நட்பு உருவானதே ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தில் இருந்து தான். எனக்கு மிகவும் சுதந்திரம் கொடுத்த ஒரு இயக்குனர். அது தான் அடுத்தடுத்து அவர் இயக்கத்தில் தொடர்ந்து என்னை நடிக்க வைக்கிறது. சத்யம் தியேட்டர் வெளியில் இருந்த நான் இந்த இடத்தில், மேடையில் இருக்கிறேன், அதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி என்றார் நடிகர் யோகி பாபு.

எனக்கு பாடல் பாடுவது மட்டுமே தெரியும். மற்ற விஷயங்களை பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனாலும், சினிமா துறையில் எவ்வளவோ பேர் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். ஒரு படம் வெற்றியடைந்தால் தான் அனைவருக்கும் வாழ்க்கை. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். தண்ணீரை யாரும் வீணாக்க வேண்டாம், தண்ணீர் என்பது தங்கம், பிளாட்டினத்தை விட விலை மதிப்புடையது. தண்ணீர் சேமிப்பு என்பது மிக முக்கியம். அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்வது அது ஒன்றே என்றார் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம்.

இந்த விழாவில் நடிகர் ராஜ்பரத், ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த், சண்டைப்பயிற்சி இயக்குனர் பிசி, இசையமைப்பாளர் ராஜ் ஆர்யன், தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.