குஜராத்: கால் இல்லாத குதிரையை முக்கால்வாசி தூரம் கடக்க வைத்திருக்கிறார் ராகுல்!

குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. ஓரளவு எதிர்பார்த்த முடிவுகள். பாஜக 99 தொகுதிகளோடு ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது. காங்கிரஸ் 77 தொகுதிகளை வென்றிருக்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால் பாஜகவுக்கு வெற்றியே. ஆனால் உண்மை அதுவல்ல. 2014 பாராளுமன்றத் தேர்தலில் 59.1% ஓட்டு வாங்கிய பாஜக 10 சதவீத ஓட்டுக்களை இழந்திருக்கிறது.

தொகுதிகளின் எண்ணிக்கையிலும் 17 குறைந்திருக்கிறது. பிரதமர் மோடியைப் பாராட்டியே தீர வேண்டும். அழுது புரண்டேனும் பார்டரில் பாஸ் ஆகி விட்டார். முதல் கட்ட தேர்தல் நடந்த தொகுதிகளில் காங்கிரசுக்கு ஆதரவு அதிகம் இருந்திருக்கிறது. மோடியின் பாகிஸ்தான் ஸ்டண்டிற்குப் பின்னான இரண்டாம் கட்டத் தேர்தலில் பாஜக முந்தியிருக்கிறது.

ராகுலுக்கு இது குறிப்பிடத்தக்க வெற்றி. குஜராத்தில் காங்கிரசின் நிலை குறித்து அறிந்தவர்களுக்கு இதன் அர்த்தம் புரியும். குஜராத்தின் பல பகுதிகளில் காங்கிரசுக்கு கிளை கிடையாது. காங்கிரசின் முக்கிய தலைவர்கள் பலரை பாஜக கரைத்திருந்தது.

ஜெயிக்கிற குதிரையில் பணம் கட்டுவது ஒரு வகை. ஆனால் கால் இல்லாக் குதிரையை முக்கால்வாசி தூரம் கடக்க வைத்திருக்கிறார் ராகுல்.

ராகுலை சிவசேனா பாராட்டியிருப்பது கவனிக்க வேண்டிய அம்சம். அதில் இருக்கும் தகவல்கள் உண்மையானவை. முடிவைப் பற்றி கவலைப்படாமல் ராகுலின் உழைப்பை அது பாராட்டி இருந்தது. இத்தேர்தலில் சில முக்கிய முடிவுகளை ராகுல் துணிச்சலாக எடுத்தார். அதில் ஒன்று ஜிக்னேஷ் மேவானிக்கான ஆதரவு.

கடந்த தேர்தலில் வாட்காம் தொகுதியில் காங்கிரஸ் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அத்தொகுதியில் ஜிக்னேஷிற்காக காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை.

சமரசங்கள் என்று பேச்சு வரும் போது ராகுல் மிதமான மதவாதத்தை கையில் எடுத்ததாக குற்றச்சாட்டுகள் வருகிறது. ஆனால் மதச்சார்பிற்கும் மதவாதத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மோடியும், ராகுலும் கோயிலுக்குச் சென்றது அவர்களின் மதச்சார்பு. உங்களுக்கு கோயில் வேண்டுமா? மசூதி வேண்டுமா? என மத உணர்வுகளைத் தூண்டுவது மதவாதம்.

குஜராத் தேர்தலில் அச்சப்பட வைத்த அம்சம் மோடியின் பேச்சு. முதல் கட்ட தேர்தல் சாதகமாக இல்லை என்ற நிலையில் மிகவும் தரம் தாழ்ந்து பேசினார் மோடி. அது அவருக்குப் புதிதல்ல. ஏற்கனவே உ.பியில் இது போல் பேசியவர் தான் அவர்.

இன்னொரு நாடு ஒரு மாநிலத் தேர்தலில் தலையிட்டது என ஒரு பிரதமர் பேசியது மிகவும் புதியது. இது இந்தியாவின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. அது வேறு தளம்.

பலம் குறைந்த எதிரியை இரட்டை வாள்களோடு பல கேடயம் கொண்டு கொண்டு பாஜக வீழ்த்தி இருக்கிறது.

கட்சி பலவீனமான நிலையிலும், பிரச்சாரத்தில் பிரதமரை அழவைத்து, முடிவு. வெளியாகத் தொடங்கிய போது சிறிது நேரம் முன்னிலை பெற்று பாஜகவை பதற வைத்திருக்கிறது காங்கிரஸ்.

தொலைக்காட்சி நேரலை ஒன்றில் ராகுலை தாவீத் என்றார் ஒரு பத்திரிக்கையாளர். உண்மைதான் தாவீதை கோலியாத்து பார்த்தது போல் தான் பாஜக ராகுலைப் பார்க்கிறது. ஆனால் தாவீது கவணைச் சுழற்றத் தொடங்கியிருக்கிறார். கோலியாத்தின் முடிவானது தாவீதின் கவண் சுழற்றும் உத்தியால் தீர்மானிக்கப்படும்.

ABUL KALAM JAILANY