“சில தோல்விகள், சில வருத்தங்கள்!” – அ.ராமசாமி

சட்டசபைத் தேர்தல் 2016 -ன் முடிவுக்குப்பின் சிலரது தோல்விக்காகப் பலரது வருத்தங்களை முகநூலெங்கும் வாசிக்க முடிகிறது. அதிகமானவர்களின் வருத்தம் வி.சி.க.வின் தலைவர் தொல். திருமாவளவனின் தோல்வி பற்றியதாக இருக்கிறது. அடுத்தது சுப. உதயகுமார்.  மூன்றாவதாக முனைவர் வே.வசந்திதேவி.

இதில் முனைவர் வசந்திதேவியின் தோல்வியும், சுப.உதயகுமாரின் தோல்வியும் எதிர்பார்த்த தோல்விதான். ஆனால் தொல். திருமாவளவனின் தோல்வியை நான் எதிர்பார்க்கவில்லை.

தமிழக வாக்காளர்கள் எப்போதும் ஆளுமைகளுக்கு வாக்களிப்பதில்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுக்க அப்படித்தான். புலத்தின் சாதனையாளர்களை ஆளுமைகள் என்கிறோம். புலம்சார்ந்த போட்டியாளர்களுக்கிடையே நடக்கும் தேர்தலொன்றில் முனைவர். வசந்திதேவி தோற்கடிக்கப்பட்டால் வருத்தப்படலாம். இதற்குத் தான் ஜனநாயக நாடுகளின் நாடாளுமன்றங்களில் இரண்டு அவைகள் இருக்கின்றன. போட்டியே போட விரும்பாத புலமையாளர்களை நியமித்து ஆட்சிநிர்வாகத்தில் பங்கேற்கச் செய்ய வழிவகை செய்யும் முறைமை அது. இப்போதும் நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா இருக்கிறது. புலமையாளர்களின் பங்களிப்பு ஆட்சியியலில் தேவையில்லையென்று கருதிய முன்னாள் முதல்வர் திரு. ம.கோ.ராமச்சந்திரன் தமிழ்நாட்டில் மேலவையைக் கலைத்தார். அப்படியொன்று இருந்ததென்பதைத் தமிழகம் மறந்துவிட்டது. மேலவையில் நியமிக்கப்படுபவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருப்பதில்லை. துறைசார்ந்த தேர்தல்களில் பங்கேற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள். கல்வித் துறைக்கென்று மேலவையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இடங்கள் உண்டு. ஆசிரியர்கள் மட்டுமே வாக்களித்து அனுப்பி வைப்பார்கள். அப்படியொரு வாக்கெடுப்பில் முனைவர் வே.வசந்திதேவி தோற்கடிக்கப்பட்டிருந்தால் வருத்தப்படலாம்.

இந்தத் தேர்தலில் அவர் போட்டியிட்டது ஓர் அடையாளம். இந்த மாநிலத்தின் முதல்வராய் இருப்பவர் எதிர்க்கப்படவேண்டியவர் என்பதைச் சொன்ன அடையாளம். “இதே முதல்வரால் நான் அரசின் பணிகளுக்காகப் பொறுப்பான நியமனங்களைப் பெற்றிருக்கிறேன். அவர்களின் கோரிக்கைக்கேற்ப அரசின் கவனத்திற்குக் கொண்டுபோக வேண்டிய கல்வித்துறை, மகளிர்நலன், மனித உரிமைசார்ந்த பிரச்சினைகளைக் கொண்டுபோயிருக்கிறேன். அதையெல்லாம் இந்த அரசு கவனத்தில் கொள்ளவில்லை. ஏற்றுச் செயல்படுத்தவில்லை. எனவே இந்த அரசு தொடரக்கூடாது என நினைக்கிறேன். எனது நினைப்பை வெளிப்படுத்த அரசின் தலைவராயிருக்கும் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களை, அவர் போட்டியிடும் ஆர்.கே. நகர் தொகுதியிலேயே எதிர்க்கிறேன். நான் இந்தத் தேர்தலில் வெற்றிபெற மாட்டேன் என்பது எனக்குத்தெரியும்; என்றாலும் எதிர்க்கிறேன்” என்ற அடையாள எதிர்ப்பைச் சொன்ன குறியீடு.

அவரை நான் நன்கு அறிவேன். தான் நம்பும் கருத்தைப் பிடிவாதமாகச் செயல்படுத்திட விரும்புபவர். அவரது வழிகாட்டுதலில் நான் வேலைகள் செய்திருக்கிறேன். எதிர்த்துப் பேசியிருக்கிறேன்; கோபத்தைக் காட்டியிருக்கிறார்; பாராட்டவும் செய்திருக்கிறார். அவரது தோல்விக்காக வருத்தப்படவில்லை. தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகளின் உள்கட்டமைப்பில் பங்குபெற்று அந்த அமைப்பைப் பொதுவெளிக்குரியதாக ஆக்கும் பணியில் ஈடுபடவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தியச் சாதியச் சமூகத்தில் ஒருவர்மீது, ஓரமைப்பின்மீது, ஒரு நிறுவனத்தின் மீது உண்டாக்கப்படும் அடையாளங்களை மாற்றுவதற்கு உள்ளிருந்து வேலைசெய்வதைவிடவும் வெளியிலிருந்து வேலை செய்வது மிக முக்கியம். அவரைப் போன்று பலரும் உள்ளே நுழைந்து வேலைசெய்யப் பாதையைப் போட்ட முன்னோடியாக மாறும் வாய்ப்பு இது. அதைத் தவறவிடக்கூடாது என்பது என் ஆசை.

 மதிப்பிற்குரிய சுப. உதயகுமாரின் தோல்வியும் எதிர்பார்த்த ஒன்றே. அணு உலை எதிர்ப்பு என்பது உலகளாவிய பிரச்சினை. அதை எதிர்ப்பவர்கள் செய்யவேண்டியது கொள்கை மாற்றம். ஒருநாட்டின் அரசு முன்வைக்கும் கொள்கைத் திட்டத்தை மாற்றம் செய்யவேண்டுமென்றால் கொள்கையை உருவாக்குபவர்களிடம் முதலில் கருத்தியல் மாற்றம் கொண்டு வரப்படவேண்டும். கொள்கைமாற்றத்தை உண்டாக்க இருவழிப் பாதையைத் தேர்வுசெய்யவேண்டும். பேரரசியலில் அனைத்துக் கட்சியிலும் இருக்கக்கூடிய மாற்றுச் சிந்தனையாளர்களைச் சந்தித்து உரையாடவேண்டும். அதேநேரத்தில் உள்ளூரில் மக்களைத் திரட்டிப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உண்டாக்கவேண்டிய மாற்றத்தை முழுமையாக மறுதலித்தார் சுப.உதயகுமார். பேசவேண்டியவர்களை எதிரிகளெனத் தீர்மானம் செய்தார். ஒருவரை – ஓரமைப்பை எதிரியென நீங்கள் அறிவிப்புச் செய்தால் உங்கள் ஆளுமையைச் சிதைக்க அனைத்துவழிகளும் கையாளப்படும்.

இந்தியாவில் ஒருவரை ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தோடும், குறிப்பிட்ட சாதியோடும் அடையாளப்படுத்தினால் போதும். அவரது பேச்சைப் பொதுச்சமூகம் செவிசாய்த்துக் கேட்காது. திருநெல்வேலியில் இருக்கும் நான் அவரது செயல்பாடுகளைப் பற்றிப் பலரும் சொன்ன சொற்களைக் கேட்டிருக்கிறேன். உள்ளூர்ப்பிரச்சினையைப் பேசும் நபர் என்றே அவர் அறியப்பட்டிருக்கிறார். அந்த அடையாளத்தை அவர் போட்டியிட்ட தொகுதியில்கூட மாற்றிவிடவில்லை இந்தத்தேர்தல்.

மதிப்பிற்குரிய தொல். திருமாவளவன் ஆளுமை அல்ல; அரசியல்வாதி. ஒற்றைப் பிரச்சினை முன்னெடுக்கும் நுண்ணரசியல்தளச் செயல்பாட்டாளரல்ல; தமிழகத்தின் பேரரசியலின் முக்கியமான முகம். தமிழனனென்றொரு இனமுண்டு; தனியே அதற்கொரு குணமுண்டு என்ற வாக்கினின் நம்பிக்கைகொண்டிருந்த இளம்பிராயக் கிளர்ச்சியிலிருந்து விடுபட்டுச் சூழலைக் கவனித்துப் பெரும்பரப்புக்குள் பயணம் செய்தவர். ஒடுக்கப்படுதலின் தந்திரங்களை உணர்ந்தநிலையில் திமிறியெழுதலின் வழிமுறைகளைத் தேடிய பயணத்தின் வழியாக, நடைபெற்ற தேர்தலின் முக்கியச் சொல்லாடலை உருவாக்கியவர். மூன்றாவது அணியெனத் தங்களையே கீழிறக்கிக் கொள்ளும் நிலைக்கு மாற்றாக மாற்றணியெனும் கருத்தியலை உருவாக்கத் தேவையான கூட்டணி அரசாங்கம் கருவை உருவாக்கியவர். இந்தக் கருவை உருவாக்கிய நிகழ்வுகள் ஓராண்டுக்கு முன்பே சூல்கொண்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி ஆட்சி என்னும் கருத்தை முன்வைக்கக் காரணமாக இருந்தது அதன் கூட்டணிக் கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் என்பதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. வடதமிழ்நாட்டில் தி.மு.க. வின் முக்கியமான ஆதரவுத்தளமாக இருப்பவை இடைநிலைச் சாதிகள். இடைநிலைச் சாதிகளிடமிருக்கும் சாதிய மனோபாவத்தைக் கணக்கில் கொண்டு விடுதலைச் சிறுத்தைகளைக் கூட்டணியிலிருந்து விலக்கி வைப்பது என்ற பேச்சை ஓராண்டுக்கு முன்பே தி.மு.க. தொடங்கியது. அவர்களை வெளியேற்றுவதில் வடமாவட்டங்களின் இரண்டாம் நிலைத்தலைவர்கள் குறியாயிருந்தார்கள். அவர்கள் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, தி.மு.க.வில் இருக்கும் தலித் தலைவர்களுமாகவும் இருந்தார்கள் என்பது கவனிக்கவேண்டிய ஒன்று. விடுதலைச் சிறுத்தைகளோடு கூட்டணி அமைத்தால் தனித்தொகுதிகள் முழுவதும் கூட்டணிக்கட்சி என்ற அடிப்படையில் விசிக.விற்குச் சென்று விடுகிறது; நமக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பே ஏற்படுவதில்லை என்று கருதினார்கள். அவர்களும் தி.மு.க,வின் தலைமையிடம் அழுத்தம் தரவே செய்தார்கள். தொடர்ந்து தங்கள் கட்சியில் இருக்கும் நபர்களை இழக்கவிரும்பாத நிலையில் தான் திராவிட முன்னேற்றக் கழகம் விடுதலைச் சிறுத்தைகளைக் கைகழுவும் முடிவை எடுத்தது. அந்த முடிவை எடுக்கப்போகிறது என்ற நிலையில் எதிர்வினையாக விசிக. கூட்டணி ஆட்சி என்னும் கருத்துருவை முன்வைத்தது. ஒருவினையின் எதிர்வினையாகவே இன்னொருவினை உருவாகிறது என்பது இயல்பியல்விதி.

கூட்டணி ஆட்சி என்னும் கருத்தியலை முன்வைத்ததோடு ஓய்ந்துவிடவில்லை என்பதுதான் தொல்.திருமாவளவனின் சாதனை. இந்தக் கருத்தியல் இந்தத் தேர்தலில் பரவலாகச் சென்று சேர்ந்திருக்கிறது. அடுத்த தேர்தலிலும் நிச்சயம் விரிந்து பரவும் என்பதே இப்போதைய நிலை. அதைச் செய்யப்போகிறவராக இருக்கப்போகிறவரும் அவர்தான். தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என நினைப்பவர்களின் குரலாக – அடையாளமாக அவர் மாறப்போகிறார் என்பதின் வெளிப்பாடாகவே அவரது தோல்விக்காக வருத்தப்படும் குரல்களைக் கவனிக்கிறேன்.

காட்டுமன்னார்கோவில் தொகுதி பாரம்பரியமாக அரசியல் உணர்வுபெற்ற தொகுதி என்பதை நானறிவேன். காட்டுமன்னார் குடித்தொகுதியின் பெரும்பாலான கிராமங்கள் காவிரியின் பாசனப்படுகைப்பிரதேசம். விவசாயம் சார்ந்த கிராமங்கள் அவை. விவசாயம் சார்ந்தவை என்பதனாலேயே சாதிய இறுக்கமும் கூடுதலாக இருக்கக் கூடியன. கிராமங்கள் என்றும் சேரிகள் என்றும் பிரித்துப் பார்ப்பதற்குத் தோதான வேறுபாடுகளுடன் காணப்படும்  அந்தத் தொகுதியைப் பற்றிக் குறிப்பிடப் பல தகவல்கள் உண்டு. விடுதலை அடைந்த அறுபது ஆண்டுகளில் பெருமளவு மாற்றங்கள் எதனையும் சந்திக்காத கிராமங்களே அதிகம் உள்ளன. அப்படி இருப்பதற்குக் கூட முக்கியக் காரணம் அத்தொகுதி தனித்தொகுதியாக இருப்பது தான்  என்று தோன்றியது

2006 தேர்தலின்போது அந்தத்தொகுதியின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றிருக்கிறேன். அப்போது அ.இ.அ.தி.மு,க.வின் கூட்டணிக்கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது. நண்பர் ரவிக்குமார் போட்டியிட்டார். அவரது வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்பே அவரது சின்னம் கோயில்மணி என்பது உறுதியானது. அதற்கு முன்பே பரப்புரையைத் தொடங்கியிருந்தாலும் எந்தச் சின்னத்தையும் சொல்லி வாக்குக் கேட்கவில்லை. சின்னம் கிடைத்தவுடன் பரப்புரையை மீண்டும் தொடங்கினார்.

அங்கீகரிக்கப்பட்ட  கட்சிகளுக்கும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கும் நமது தேர்தல் முறை கண்கூடாகக் காட்டும் பாரபட்சம் சின்னம் ஒதுக்குதல். அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே தனது  சின்னத்தைக் கூறி வாக்குக் கேட்கும் வாய்ப்பு அந்த வேட்பாளருக்கு உண்டு. ஆனால் அங்கீகாரம் பெறாத கட்சி வேட்பாளருக்குச் சின்னம் கிடைப்பதோ சரியாக இருபத்தியோரு நாட்களுக்கு முன்புதான். தள்ளுபடி செய்தல், வாபஸ் வாங்குதல் எல்லாம் முடிந்த பின்புதான் சுயேச்சைகளுக்கும் அங்கீகாரம் பெறாத கட்சியின் வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன. பெயரைச் சொல்லி ஒரு முறையும் சின்னத்தை அறிமுகப்படுத்தி ஒரு முறையும் பிரசாரத்தை தொடர வேண்டியுள்ளது.

ரவிக்குமாருக்கு மணிச் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த வெங்கலக் கடையில் ஒரு பெரிய மணியை வாங்கி திறந்த ஜீப்பில் கட்டிக் கொண்டு காட்டுமன்னார் குடியின் வீதிகளில் போனபோது கண்ட காட்சிகள் கலக்கத்தை ஏற்படுத்தின. பல தேர்தலைக் கண்ட கைச் சின்னம் வரையப்பட்ட சுவர்கள் பளிச்சென்று தெரிந்தன. ஆனால் மணிச்சின்னம் வரையப்பட்ட சுவர்கள் அதிகம் தென்படவில்லை. சுவர்களில் மணி வரையப்படாத நிலையில் சின்னம் அறிமுகமாவது சிரமம் என்று பேசிக் கொண்டோம். ஆனால் அடுத்த நாள் கிராமங்களுக்குப் போன போது இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஒவ்வொரு குடிசை வீட்டு முன்னாலும் வாசல் தெளித்துக் கோலம் போட்டு வேட்பாளரை வரவேற்கக் காத்திருந்தனர் பெண்கள். குலவைகள் , ஆரத்திகள், சூடம் காட்டுதல் என்று நகர்ந்த போது நான் தெருக்களின் கோலத்தைக் கவனித்துக் கொண்டே போனேன். ஒவ்வொரு  கோலத்திற்குள்ளும் மணிச் சின்னம் தூக்கலாகத் தெரிந்தது. கோலம்போடும் கைகள் மணிச்சின்னத்தை லாவகமான ஓவியக் கலைஞர்களின்  கைவண்ணம் போல  விதம்விதமாகத் தீட்டியிருந்தன. அந்தக் கோலங்களும் ஆரவாரமும் அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தன.

தலைவர் தொல்.திருமாவளவனை அத்தொகுதியின் செல்லப்பிள்ளையாக இருந்த காங்கிரஸ் கட்சியின் இளையபெருமாளின் இடத்தில் வைத்துப் பார்த்தார்கள் என்பதை அப்போதே நான் உணர்ந்தேன். அவர்களோடு நான் பேசியபோது அவரது பெயரில் இருக்கும்  -ன் – விகுதியை ஒருவர்கூட உச்சரித்துக் கேட்கவில்லை. வளவர் என்றே சொன்னார்கள். தேர்தல் அரசியலின் அனைத்துத் தந்திரங்களையும் பயன்படுத்தி மிகக் குறைந்த – 87 வாக்குகள் குறைவாக வாங்கியுள்ளார் என்று தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதி அறிவிப்புச் செய்திருக்கிறார். அந்த அறிவிப்பைத் தொல் .திருமாவளவனும், அவருக்காக வருத்தப்படும் நானும், வெளியில் இருக்கும் நடுத்தரவர்க்க மனிதாபிமானிகளும் ஒத்துக்கொள்ளக்கூடும்; ஒத்துக்கொண்டு மறந்தும் போகலாம். ஆனால் அவருக்காக வாக்களித்த 48363 பேரும் அவ்வளவு எளிதாக மறக்க மாட்டார்கள்.

அ.ராமசாமி

Courtesy: ramasamywritings.blogspot.in