“ரஜினி போல் பணிவான, எளிமையான பெரிய நடிகர் யாரும் இல்லை!” – ராதிகா ஆப்தே

உடல்நலம் தொடர்பான ‘ஆப்ஸ்’ ஒன்றின் வெளியீட்டு விழா பெங்களூரில் நடைபெற்றது. ‘கபாலி’ படத்தின் கதாநாயகி ராதிகா ஆப்தே இவ்விழாவில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது. “உங்களுக்கு தமிழ் தெரியாது. எனவே ‘கபாலி’ படத்தில் நடித்தபோது ரஜினிகாந்துடன் மராத்தி மொழியில் பேசினீர்களா?” என்று ஒரு செய்தியாளர் கேட்டார்.

இதற்கு பதிலளித்த ராதிகா ஆப்தே, “நான் ரஜினி சாரை முதன்முதலாக சந்தித்தபோது, அவரிடம் என்னை மராத்தி மொழியில் அறிமுகப்படுத்திக் கொண்டேன். நாங்கள் இருவரும் முதலில் ஆங்கிலத்தில் தான் பேசினோம். ரஜினி சாரிடம் நான் கேட்ட முதல் கேள்வி, ‘உங்களுக்கு மராத்தி தெரியுமா?’ என்பது தான். ‘கர்நாடகாவின் பெல்காவி பகுதியை சேர்ந்தவன் என்பதால் எனக்கு மராத்தி மொழியில் பேசத் தெரியும்’ என்று அவர் கூறினார்.

”கபாலி’ படத்தின் படப்பிடிப்பின்போது, இயக்குனர் பா.ரஞ்சித் சில காட்சிகள் தொடர்பாக சொன்ன விளக்கங்களை எல்லாம், எனக்காக ரஜினி சார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறினார்.

”அவரை போல் பணிவான, எளிமையான பெரிய நடிகர் யாரும் இல்லை. மிகவும் உண்மையானவராகவும், கடுமையாக உழைக்கக் கூடியவராகவும் உள்ள ரஜினி சாருடன் நடித்தது மிக உயர்ந்த அனுபவமாக அமைந்திருந்தது” என்றார் ராதிகா ஆப்தே.