மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை குறிப்பு

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி என்ற சிற்றூரில் ஐயப்பன் – ராஜேஸ்வரி தம்பதியரின் மகளாக 1963ஆம் ஆண்டு பிறந்தார்..

அவர் 1969ஆம் ஆண்டு ‘துணைவன்’ படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, பல படங்களில் நடித்தார். பின்னர் 1976ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய ‘மூன்று முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘காயத்ரி’, ‘கவிக்குயில்’ போன்ற பல படங்களில் நடித்த ஸ்ரீதேவி, பாரதிராஜாவின் ’16 வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’. பாலுமகேந்திராவின் ‘மூன்றாம் பிறை’, மகேந்திரனின் ‘ஜானி’, கே.பாலச்சந்தரின் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, தமிழ் ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்தார்.

தமிழ் படங்களில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடித்து பிரபலமாக விளங்கிய ஸ்ரீதேவி, 1978ஆம் ஆண்டு ‘சொல்வா சவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி படவுலகில் அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே அங்கும் ‘நம்பர் ஒன் கதாநாயகி’யாகி புகழுடன் வலம் வந்தார்.

இந்தி நடிகர் அனில் கபூரின் அண்ணனும், இந்தி திரைப்பட தயாரிப்பாளருமான போனி கபூரை மணந்து மும்பையில் நிரந்தரமாக குடியேறிய அவர், ஜான்வி, குஷி என்ற இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானார்.

நடிப்பதில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்த ஸ்ரீதேவி, 2012ஆம் ஆண்டு ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ என்ற படத்தின் மூலம் திரையுலகுக்குள் மறுபிரவேசம் செய்தார். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘புலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். கடைசியாக வெளிவந்த ‘மாம்’ படத்திலும் தனது திறமையை நிரூபித்திருந்தார்.

பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் ஸ்ரீதேவி என்பது குறிப்பிடத்தக்கது.