சென்னை மாநகராட்சியின் புதிய மேயர் பிரியா ராஜன்!

0a1tசென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு பிரியா ராஜனும், துணை மேயர் பதவிக்கு மகேஷ்குமாரும் போட்டியிடுவதாக தி.மு.க அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெற்றி பெற்றுள்ள பெருவாரியான கவுன்சிலர்கள் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் என்பதால், நாளை நடைபெறவிருக்கும் மறைமுகத் தேர்தலில் இவ்விருவரும் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

28 வயதான பிரியா ராஜன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் பேத்தி ஆவார். சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்துள்ளார். நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியின் 74-வது வார்டில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை விட 6,299 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அமைச்சர் சேகர்பாபு ஆதரவினால் பிரியா ராஜனின் பெயர் மேயர் பட்டியலில் தேர்வாகியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தமுறை சென்னை மேயர் பதவி எஸ்.சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பிரியா ராஜன் சென்னையில் மூன்றாவது பெண் மேயராகப் பதவியேற்கவுள்ளார். அதோடு, வடசென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் மேயர் என்ற பெருமையும் பிரியா ராஜனுக்கே வந்து சேரும். இதற்கு முன்பு தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தான் மேயராகப் தேர்வாகி வந்தார்கள்.

சென்னை மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மகேஷ்குமார், சைதை பகுதியில் வரும் தாடண்டன் நகர், சின்னமலை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 169-வது வார்டு கவுன்சிலர். இவர் மாமனார் பவளவண்ணன், சைதை பகுதியில் பிரபலமான அரசியல் பிரமுகர். அவர் பெயரைத்தான், ஜோன்ஸ் ரோடு சுரங்கப்பாதைக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி வைத்தார்.

பாரம்பர்ய தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்த மகேஷ், 2006-ல் உறுப்பினராகப் பதவியிலிருந்தவர். இடையில் ஒருமுறை, சைதை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோற்றவர். இவருக்கும் தற்போதைய சைதை சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வும் சுகாதாரத்துறை அமைச்சருமான மா.சுப்ரமணியனுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாகக் கூறப்பட்டாலும், மா.சு.வின் சம்மதத்துடனேயே மகேஷ் துணை மேயர் ஆகிறார்.

0a1u