“தேமுதிக, தாமாகவுடன் மக்கள்நல கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது!”

மக்கள் நலக் கூட்டணியில் இணைவது தொடர்பாக தேமுதிக, தமாகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்தார்.

திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்பதற்காக விருதுநகர் வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“விருதுநகர் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன் பலத்த மழை காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பலத்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்கள் பெரும் சேதமடைந்தன. இதற்காக மத்திய அரசிடம் ரூ.25 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரியது. ஆனால், மத்திய அரசு ரூ.1,700 கோடி தருவதாக அறிவித்துள்ளது. இது மிகவும் குறைவான தொகை. அரசு கோரிய முழு தொகையையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் அரசு ஊழியர்களை அழைத்துப் பேசி அரசு சுமூக தீர்வு காண வேண்டும். தமிழகத்தில் மட்டுமே விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்க கெயில் முடிவு செய்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

மக்கள் நலக் கூட்டணி தேர்தலுக்கு முன்பிருந்தே மக்கள் பிரச்சினையை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வருகிறது. மதுரை மாநாட்டுக்குப் பிறகு மக்கள் நலக் கூட்டணி மேலும் வலுவடைந்து வருகிறது. குறைந்தபட்ச செயல் திட்டத்தில் மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு, விவசாயிகள் நலன் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் மக்களிடம் எடுத்து சொல்லப்படும்.

மக்கள் நலக் கூட்டணி தேர்தலுக்குப் பின்பும் தொடரும். எங்களது கூட்டணியில் சேருவது தொடர்பாக தேமுதிக, தமாகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தொகுதி பங்கீடு குறித்து கட்சி தலைவர்கள் கூடி விரைவில் முடிவு செய்வர்” என்றார்.