ஜெயலலிதா ஆலோசனைப்படி(?) அவரது இலாகாக்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டதையடுத்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை தமிழக தற்காலிக ஆளுநர் வித்யாசாகர் ராவ்  கடந்த 7ஆம் தேதி அழைத்து ஆலோசனை நடத்தினார்.

ஜெயலலிதா பூரண குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பும்வரை, அடுத்த 6 மாதங்களுக்கு சட்டப்பேரவையை முடக்கி வைத்துவிட்டு, ஆளுநர் ஆட்சியை அமல் செய்ய வேண்டும் என்று தமிழினப் பகைவன் சுப்பிரமணியன் சுவாமி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் கோரிக்கை வைத்த பின்னணியில், ஆளுநர் நடத்திய மேற்கண்ட ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

ஆனால், ஆளுநர் ஆட்சியை அமல் செய்வதன் மூலம் பாரதிய ஜனதாக்கட்சி கொல்லைபுறம் வழியாக நுழைந்து தமிழ்நாட்டை ஆள நினைக்கிறது என பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததையடுத்து, அந்த முயற்சி கைவிடப்பட்டது.

எனினும், அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவரை  தற்காலிக முதல்வராக நியமித்து, அவரை தனது கைப்பாவையாக்கி, மறைமுகமாக ஆட்சி நடத்த பா.ஜ.க. திட்டம் தீட்டியது. ஆனால், பா.ஜ.க.வின் கைப்பாவையாக இருப்பதற்கு அ.தி.மு.க. அமைச்சர்கள் யாரும் தயாராக இல்லாததால், அந்த திட்டமும் கைவிடப்பட்டது.

“தற்காலிக முதலமைச்சர் தேவை இல்லை. ஜெயலலிதா கவனித்து வந்த இலாகாக்களை தற்காலிகமாக ஒன்று அல்லது இரண்டு அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுத்தால் போதும்; தொய்வில்லாமல் நிர்வாகத்தை நடத்திச் செல்ல முடியும்” என்பது அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளின் கோரிக்கையாக இருந்தது.

இதனால், முதலமைச்சர் ஜெயலலிதா நிர்வகித்து வந்த இலாகாக்கள், தற்காலிகமாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து முதலமைச்சராக தொடர்வார். முதலமைச்சரின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. அமைச்சரவை கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குவார். ஜெயலலிதா நலம்பெற்று திரும்பும்வரை இந்த ஏற்பாடு தொடரும். முதலமைச்சரின் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எனவே, முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்த பொதுத்துறை, இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் மற்றும் உள்துறை ஆகிய இலாகாக்களை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் இனி கூடுதலாக கவனிப்பார்.

இது ஒருபுறம் இருக்க, “முதலமைச்சரின் ஆலோசனைப்படி” இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஆளுநர் கூறியிருப்பது தான் குழப்பமாக இருக்கிறது. முதலமைச்சரும், ஆளுநரும் எங்கே, எப்போது சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்? அல்லது செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் தனது “ஆலோசனை”யை எப்படி, யார் மூலம், எந்த வடிவத்தில் ஆளுநருக்கு தெரியப்படுத்தினார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

Read previous post:
0a
“ரஜினி போல் பணிவான, எளிமையான பெரிய நடிகர் யாரும் இல்லை!” – ராதிகா ஆப்தே

உடல்நலம் தொடர்பான ‘ஆப்ஸ்’ ஒன்றின் வெளியீட்டு விழா பெங்களூரில் நடைபெற்றது. ‘கபாலி’ படத்தின் கதாநாயகி ராதிகா ஆப்தே இவ்விழாவில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது. “உங்களுக்கு

Close