“ஜெயலலிதா மகன்” என உரிமை கோரியவரை கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் கிராமத்தை சேர்ந்தவர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி (வயது 32). இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிரு ந்ததாவது:-

தத்து எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நான் மறைந்த நடிகர் சோபன்பாபு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது மகன் ஆவேன். நான் 1985ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி பிறந்தேன்.

நான் குழந்தையாக இருந்தபோது, என் தாய்-தந்தைக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 1986ஆம் ஆண்டு காஞ்சிகோவில் கிராமத்தை சேர்ந்த வசந்தாமணி என்பவருக்கு, மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் என்னை தத்துக் கொடுத்துவிட்டனர். இதற்கான ஒப்பந்தத்தில், என் பெற்றோர் சோபன்பாபு, ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனர்.

ஈரோட்டில் தத்து எடுத்த பெற்றோருடன் நான் வசித்தாலும், அடிக்கடி சென்னை வந்து என் தாயார் ஜெயலலிதாவை சந்திப்பேன். கடந்த மார்ச் மாதம் அவரை சந்தித்தபோது, என்னை தன் மகன் என்று செப்டம்பர் மாதம் அறிவிக்கப் போவதாக ஜெயலலிதா கூறினார்.

இதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்து வந்தார். இவையெல்லாம் தற்போது கர்நாடக மாநில சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நன்றாக தெரியும். இதனால், ஜெயலலிதாவுடன் அவர் தகராறு செய்தார். இந்த நிலையில், என் தாயார் அப்போலோ மருத்துவமனையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர் டிசம்பர் 5ஆம் தேதி அவர் மரணம் அடைந்தார்.

என் தாயாருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு சசிகலாவும், அவரது உறவினர்களும் என்னை அனுமதிக்கவில்லை. டி.டி.வி. தினகரனின் தூண்டுதலின் பேரில், அடையாளம் தெரியாத சிலர் என்னை கடத்திச் சென்று, சிறுதாவூர் பங்களாவில் அடைத்து வைத்து கொடுமை செய்தனர். அந்த பங்களாவில் வேலை செய்யும் காவலாளியின் உதவியுடன் அங்கிருந்து தப்பி வந்தேன்.

அதன்பின்னர் என்னுடைய நலவிரும்பிகள் கொடுத்த யோசனையின் அடிப்படையில், டிராபிக் ராமசாமியை கடந்த மாதம் இறுதியில் சந்திக்கச் சென்றேன். இதை தெரிந்துகொண்ட சசிகலாவின் ஆட்கள், உயர்நீதிமன்றம்முன் உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் வைத்து என்னை தாக்கினார்கள். இதில் நான் படுகாயம் அடைந்தேன்.

இதன்பின்னர் கடந்த 11ஆம் தேதி டிராபிக் ராமசாமியை சந்தித்து, சசிகலாவுக்கு எதிராக போராடி, என்னுடைய உரிமையையும், என் தாயாரின் சொத்துக்களையும் மீட்டுத் தரும்படி கேட்டேன்.

அவர் கொடுத்த அறிவுரையின்படி, தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், தமிழக டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு கடந்த 12ஆம் தேதி புகார் மனுவை அனுப்பினேன். தேனாம்பேட்டை போலீசாருக்கும் தனியாக புகார் மனு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கும், என்னை தத்து எடுத்துள்ள பெற்றோருக்கும் போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. தற்போது சசிகலாவின் ஆட்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவர்கள் தற்போதைய முதலமைச்சரிடம் செல்வாக்கு பெற்றவர்கள். எனவே, எனக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பை வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு மனுவில் கிருஷ்ணமூர்த்தி கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த மார்ச் 17ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் முன்னிலையில் வந்தபோது, இவரை (கிருஷ்ணமூர்த்தியை) ஏன் கைது செய்யக் கூடாது என்று கேட்ட நீதிபதி, அவருடன் வந்திருந்த டிராபிக் ராமசாமியையும்  விமர்சனத்துக்கு உள்ளாக்கினார். மேலும் இவர் சமர்ப்பித்த ஆவணங்கள் உண்மையானது தானா என்று போலீஸ் கமிஷனர் சரி பார்க்கவும் உத்தரவிட்டார் நீதிபதி மகாதேவன்.

இந்நிலையில் கிரைம் பிரிவு போலீஸார் கிருஷ்ணமூர்த்தி தரப்பு ஆவணங்கள் போலி என்று அறிக்கை அளித்தனர். இதனை பதிவு செய்துகொண்ட உயர்நீதிமன்ற நீதிபதீ மகாதேவன் ‘மனுதாரரைப் பிடித்து சட்டப்பூர்வ நடவடிக்கை’ எடுக்க உத்தரவிட்டார்.

இன்று கிருஷ்ணமூர்த்தி, டிராபிக் ராமசாமி இருவருமே நீதிமன்றத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், “நீதிமன்றத்துடன் மனுதாரர் விளையாட அனுமதிக்க முடியாது. அவரைப் பிடித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுங்கள்” என்று கூறி அடுத்த விசாரணையை ஏப்ரல் 10ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார் நீதிபதி.