எல்லை தாண்டி ராணுவ தாக்குதல்: மோடிக்கு “அகண்ட பாரத” கட்சிகள் பாராட்டு!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள ‘லைன் ஆஃப் கண்ட்ரோல்’ (எல்.ஓ.சி) எனப்படும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகே, ‘சுதந்திர காஷ்மீர்’ (ஆசாத் காஷ்மீர்) என்று பாகிஸ்தானாலும், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர்’ (பாகிஸ்தான் ஆக்குப்பைடு காஷ்மீர் – பி.ஓ.கே.) என இந்தியாவாலும் அழைக்கப்படும் பகுதிக்குள் இந்திய ராணுவம் ஊடுருவி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் அப்பகுதியில் இருந்த காஷ்மீர் தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது .

புதன்கிழமை நள்ளிரவு சுமார் 12.30 மணி முதல் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணி வரை சுமார் 4 மணி நேரம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து, ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர் லெப்டினண்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஊடகங்களிடம் தெரிவிக்கும்போது, “கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே தீவிரவாதக் குழுக்கள் முகாமிட்டிருப்பதாக வந்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் இந்திய ராணுவம் வியூக ரீதியான சில தாக்குதல்களை அப்பகுதியில் மேற்கொண்டது.  இதில் தீவிரவாதக் குழுக்களுக்கும், அதனை ஆதரித்தவர்களுக்கும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளது” என்றார்.

கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தியதற்கு, இந்திய ராணுவத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், “அகண்ட பாரதம்” என்ற விரிவாக்க கோட்பாடு கொண்ட பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட “பாரதிய” கட்சிகளின் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா, “இந்திய ராணுவம், நமக்கு பாதிப்பு இல்லாமல் பயங்கரவாதிகளுக்கு பலத்த சேதம் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு உறுதி பூண்டுள்ளதை இந்திய ராணுவம் மீண்டும் உறுதி செய்துள்ளது” என கூறியுள்ளார்.

”இந்தியா மீண்டும் பிரதமரின் வீரத்தை கண்டது. இந்திய வீரர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

”நம் நாடு வலிமையான நாடு என்பதை பிரதமர் வெளிக்காட்டியுள்ளார். பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களும், ராணுவம் மற்றும் பிரதமர் குறித்து பெருமை கொண்டுள்ளனர்” என மகாராஷ்டிர முதலமைச்சர் பட்நாவீஸ் கூறியுள்ளார்.

“பாகிஸ்தானுக்கு சரியான தகவல் சொல்லப்பட்டுள்ளது. இது போன்ற தாக்குதலால் பயங்கரவாதம் குறித்து பாகிஸ்தான் விழித்துக்கொள்ளும் நிலை வரும். இந்திய ராணுவ நடவடிக்கைக்கு பாராட்டுகள். பயங்கரவாத ஒழிப்புக்கு காங்கிரஸ் ஆதரவாக நிற்கும். இந்த விஷயத்தில் அரசுடன் கை கோர்த்து நிற்போம்” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்ட செய்தியில், “பயங்கரவாதத்திற்கு எதிராகவும், பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருபவர்களுக்கு எதிராகவும் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்” என்றும், காங்கிரஸ் கட்சியும், தானும், நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு சல்யூட் செய்வதாகவும் கூறியுள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “பாரத மாதாவுக்கு ஜே. நமது ராணுவத்துடன் நாட்டு மக்கள் இருப்பார்கள்” என கூறியுள்ளார்.

“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா எடுத்துக்கொள்ள வேண்டும்” என சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் கூறியுள்ளார்.