உலகம் மீண்டும் ஒருமுறை மெரினாவை பிரமிப்புடன் பார்த்தது…!

ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் லட்சக்கணக்கில் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டு தொடர் அமர்வு போராட்டம் நடத்தியதை உலகம் வியப்புடன் பார்த்தது. அதுபோல், சாதுவானவர் என பார்க்கப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மன்னார்குடி மாஃபியாவுக்கு எதிராக இன்று மெரினாவில் கிளர்ந்தெழுந்து போர்க்கொடி உயர்த்தியுள்ளதை உலகம் மீண்டும் ஒருமுறை பிரமிப்புடன் பார்த்தது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.50 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாதுகாப்பு போலீஸாருடன் திடீரென மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்தார். ஜெயலலிதாவின் சமாதி முன் அமர்ந்த அவர், மவுனமாக கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். இறுகிய முகத்துடனும், கண்ணீருடனும் அவர் தியானம் செய்யும் தகவல் காட்டுத்தீ போல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அங்கு நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் வ ந்து குவிந்தனர்.

 40 நிமிடங்கள் தியானத்தில் இருந்த ஓ.பி.எஸ், பின்னர் கலங்கிய கண்களை துடைத்தபடி எழுந்தார். ஜெயலலிதாவின் சமாதியை சுற்றி வந்து விழுந்து வணங்கினார். அதைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம் ஓ.பி.எஸ். மனம் திறந்து கூறியதாவது:

மனசாட்சி உந்தியதால்தான் இங்கு வந்தேன். கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை கழக உடன்பிறப்புகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அம்மாவின் ஆன்மா என்னை உந்தியது. அதனால்தான் இங்கு வந்தேன்.

புரட்சித்தலைவி அம்மா உடல்நிலை குன்றியபோது 70 நாட்களுக்கும் மேலாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறது. கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நீங்கள்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்றும், கழகத்தின் பொதுச் செயலாளராக மதுசூதனன் இருக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். அம்மா இருக்கும்போது இதற்கு என்ன அவசியம் வந்துவிட்டது என்று கேட்டு அழுது புலம்பினேன். முதல்வராக பொறுப்பேற்க மறுத்தேன்.

அதற்கு அவர்கள், “தற்போது அசாதாரணமான சூழல் உள்ளது. எனவே மாற்று ஏற்பாடு செய்ய வேண்டி உள்ளது. ஏற்கெனவே 2 முறை அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட உங்களைச் சொன்னால் தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். வேறு ஒருவரை சுட்டிக் காட்டினால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று சொன்னார்கள்.

இக்கட்டான சூழல் இருந்தபோது கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அம்மாவின் ஆட்சிக்கு சிறு களங்கம்கூட, அவப்பெயர் கூட ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கண்ணும், கருத்துமாக இருந்து ஆட்சி செய்தேன்.

அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் வந்து, ‘நீங்கள் முதல்வராகி விட்டீர்கள். என் அக்காவை கூட்டிக்கொண்டு நான் ஊருக்குப் போகிறேன் என (சசிகலாவின் தம்பி) திவாகரன் கூறினார்’ என தெரிவித்தார். நான் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டேன். அதற்கு சின்னம்மாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக்க வேண்டும் என்றார்.

வார்தா புயல் நிவாரணப் பணியை மேற்கொண்டது, ஆந்திர முதல்வருடன் பேசி குடிநீர் தேவையை பூர்த்தி செய்தது, ஜல்லிக்கட்டுக்காக பிரதமரை சந்தித்துப் பேசியது, சட்டம் கொண்டு வந்தது போன்ற செயல்களால் எனக்கு நல்ல பெயர் ஏற்பட்டதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வராக நான் செயல்பட்டு வருகிறேன். ஆனால், வருவாய்த்துறை அமைச்சராக என்னால் நியமிக்கப்பட்ட ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்றார். இதை உடனடியாக பொதுச்செயலாளர் கவனத்துக்கு கொண்டு சென்றேன். சட்டப்பேரவை உறுப்பினர் குழு தலைவராக என்னை தேர்வு செய்து, என் பரிந்துரையில் வருவாய்த்துறை அமைச்சராக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். என் அமைச்சரைவையில் இருப்பவரே இன்னொருவரை முதல்வராக வேண்டும் என பேட்டி அளித்தால் அது நீதிக்கும் நியாயத்துக்கும் தர்மத்துக்கும் சரி தானா? ஆளுநர் கூப்பிட்டு பலத்தை நிரூபித்து காட்டுங்கள் என்றால் தேவையில்லாத பிரச்சனை வருமே என்று சொன்னேன். உதயகுமாரை கூப்பிட்டு கண்டித்துவிட்டோம். இனி யாரும் இப்படி பேசமாட்டார்கள் என்றார்கள்.

என் அறைக்கு வந்த கூட்டுறவுத் தறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உதயகுமார் பொறுப்பில்லாமல் பேட்டி அளித்தார் என கூறிவிட்டு, மதுரைக்கு சென்று அவரும் அதேபோல் பேட்டியளிக்கிறார். அடுத்த நாள் நாடாளுமன்ற துணைத் தலைவரும் கடிதம் மூலம் அதையே வலியுறுத்தினார். செங்கோட்டையனும் அதே கருத்தை வலியுறுத்தினார். அதன்பின், சில அமைச்சர்களை, எம்எல்ஏக்களை அழைத்து என்னை முதல்வராக அமர்த்திவிட்டு ஏன் அசிங்கப்படுத்துகிறார்கள் என்று சொன்னேன். ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கட்சியின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். தொண்டர்களும் அதிருப்தியிலும், வருத்தத்திலும் இருக்கிறார்கள் என்றேன்.

ஜெயலலிதா சோதனைகளைத் தாண்டி, உருவாக்கிய இந்த இயக்கத்தை 2011-ல் ஆட்சியை தந்து, மீண்டும் 2016-ல் ஆட்சியை தந்துள்ளார்கள். பல்வேறு திட்டங்கள் மூலம், உலகத்தில் உள்ள மக்கள் பாராட்டுகின்றனர். நம் கையில் மிகப் பெரிய வலுவான கட்சியையும், ஆட்சியையும் தந்துள்ளார்கள். இதற்கு எந்த பங்கமும் வந்துவிடாத வகையில் நம்மைப் போன்ற சீனியர்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும் என்றேன்.

என் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டது. பலரிடம் கூறி வருத்தப்பட்டேன். பொறுமையாக காத்திருந்தேன். என்னால் கடுகளவு பங்கமும் வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அமைதியாக இருந்தேன். இந்த சூழலில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. எனக்கு தகவல் இல்லை. அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் தலைமைக் கழகத்தில் கையெழுத்து வாங்குவதாக தெரிவித்தனர். நான் எண்ணூரில் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை ஆய்வு செய்து கொண்டிருந்தேன். அதன்பின் போயஸ் தோட்ட இல்லம் சென்றேன்.

அங்கு மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள், சசிகலா குடும்பத்தினர் இருந்தனர். என்னை அமரச் சொன்னார்கள். அப்போது சசிகலா முதல்வராக பொறுப்பேற்க அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றார்கள். அதற்கு இப்போது என்ன அவசியம் என்று கேட்டேன். பொதுச் செயலாளர், முதல்வர் ஆகிய இரண்டு பதவிகளும் ஒருவரிடம் இருப்பது தான் சரியாக இருக்கும் என்றார்கள். எம்.எல்.ஏ.க்கள் கூடியிருக்கிறார்கள். நீங்கள்தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். இரண்டு மணி நேரம் விவாதம் நடைபெற்றது. என் தரப்பு வருத்தத்தைக் கூறியபோது யாரும் பேசவில்லை. என் கையைப் பிடித்துக் கொண்டு, கட்சிக் கட்டுப்பாட்டை காப்பாற்ற வேண்டும். நீங்கள் மறுத்தால், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகிவிடும். எனவே, நீங்கள்தான் இப்போதும் செயல்பட வேண்டும் என்றார்கள். என்னைக் கட்டாயப்படுத்தி, சம்மதிக்க வைத்து, இக்கட்டான சூழலில் முடிவை எடுக்க வைத்தார்கள்.

இதனை நாட்டு மக்களுக்கும், ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் தற்போது இங்கு வந்தேன். ஜெயலலிதாவின் ஆன்மாவும், தொண்டர்களிடம், மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியது. கட்சியின் ஒட்டுமொத்த செயல் வீரர்களும், ஒட்டுமொத்த மக்களும் விரும்பும் ஒருவர்தான் பொதுச் செயலாளராக, முதல்வராக வர வேண்டும். அது நானாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. தமிழ்நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அம்மா ஆட்சியின் நல்ல பெயரைக் காப்பாற்றக் கூடிய ஒருவர் தான் முதல்வராக வர வேண்டும். இந்த கருத்தில் கடைசி வரை நான் உறுதியாக இருப்பேன். இதற்காக தன்னத்தனியாகக் கூட இருந்து போராடுவேன்.

இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.

இதைத் தொடர்ந்து, “உங்கள் ராஜினாமாவை திரும்ப பெறுவீர்களா?” என செய்தியாளர்கள் கேட்டபோது, “கட்சி நிர்வாகிகளும், மக்களும் விரும்பினால் ராஜினாமாவை திரும்ப பெறுவேன்” என்றார்.