“என் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கவே மாட்டேன்”: மம்தா பானர்ஜி அதிரடி!

“என் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கவே மாட்டேன்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் பேசிய மம்தா, ”மத்திய அரசு மக்களின் உரிமையிலும், அந்தரங்கத்திலும் குறுக்கிடுகிறது. யாருடைய மொபைல் எண்ணுடனும் ஆதார் எண் இணைக்கப்படக் கூடாது. என்னுடைய மொபைல் எண் முடக்கப்பட்டால் கூட, என் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்கவே மாட்டேன்.

மத்திய அரசு நாட்டின் மீது எதேச்சதிகாரப் போக்கைக் கட்டவிழ்த்து விடுகிறது. அவர்களுக்கு எதிராக யாரும் குரலை உயர்த்த முடியாது. அவ்வாறு செய்தால் ஐடி ரெய்டு, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ விசாரணைகள் தொடங்கும்.

ஆனால் எங்கள் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டாலும் நாங்கள் அவர்களை (பாஜக) எதிர்ப்போம். நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல.

பண மதிப்பு நீக்கம் மாபெரும் ஊழல். அதற்கு கண்டிப்பாக விசாரணை தேவை. மன்மோகன் சிங் மற்றும் யஸ்வந்த் சின்ஹா ஆகியோர் பணமதிப்பு நீக்கத்தை விமர்சிக்கின்றனர். அவர்கள் அனைவரும் தவறான கருத்தையா முன்மொழிகிறார்கள்?

எங்கள் கட்சியும் பணமதிப்பு நீக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளான நவம்பர் 8ஆம் தேதியைக் கருப்பு தினமாக அனுசரிக்கும்” என்றார் மம்தா..