குண்டர் சட்டம் ரத்து: திருமுருகன் காந்தியை வரவேற்க ஏற்பாடு தீவிரம்!

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சென்னை புழல் சிறையிலிருந்து நாளை வெளியே வரவிருக்கும் அவர்களை வரவேற்க தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது மே 17 இயக்கம்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் நடந்த போராட்டத்தை தொடர்ந்து மெரினாவில் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கடந்த மே 21-ம் தேதி மே 17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் போரில் உயிரிழந்த தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர்.

இதில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குநர் வ.கவுதமன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உட்பட 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். போராட்டத்தின் போது பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக திருமுருகன் காந்தி உள்ளிட்ட சிலரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அதைத் தொடர்ந்து திருமுருகன் காந்தி (42), தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த கோவை ஜெகன் (32), சென்னை எம்ஆர்சி நகர் டைசன் (27), தாம்பரம் அருண்குமார் (27) ஆகிய 4 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு செப்டம்பர் 13-ம் தேதி நீதிபதிகள் ஏ. செல்வம், கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இறுதி விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் வழக்கின் தீர்ப்பை வரும் 19 ஆம் தேதி அளிப்பதாக நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார் மற்றும் இளமாறன் உள்ளிட்ட நால்வர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் 100 நாட்களுக்கும் மேலாக சிறைவாசத்தை அனுபவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் நாளை புழல் சிறையில் இருந்து வெளியே வரும்போது, புழல் சிறை முன்பாக இவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மே 17 இயக்கத்தினரும், தோழமை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.