ஒளிப்பதிவாளர் சங்க தேர்தல்: பி.சி.ஸ்ரீராம் அணி வெற்றி!

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்க தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் அணி வெற்றி பெற்றுள்ளது. சங்கத்தின் புதிய தலைவராக பி.சி.ஸ்ரீராம் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.

8 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில், ‘சேவை அணி’ சார்பில் ஜி.சிவா தலைமையிலான குழுவினரும், ‘நடுநிலை அணி’ சார்பில் பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான குழுவினரும், ‘ஆண்டவர் அணி’ சார்பில் கன்னியப்பன் தலைமையிலான குழுவினரும் போட்டியிட்டனர்.

தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள 912 உறுப்பினர்களில், 704 பேர் வாக்களித்தனர் நடுநிலை அணியின் சார்பில் போட்டியிட்ட பி.சி.ஸ்ரீராம் 555 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே அணியைச் சேர்ந்த பி.கண்ணன் (443 வாக்குகள்) செயலாளராகவும், ராம்நாத் ஷெட்டி (445 வாக்குகள்) பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாலமுருகன், இளவரசு, ஸ்ரீதர் ஆகியோர் இணைச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.