கோகுல்ராஜ் கொலை குற்றவாளி யுவராஜுக்கு இறுதிமூச்சு உள்ள வரை சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சேலம் பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ்  ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் அருண் ஆகியோருக்கு சாகும் வரை (இறுதிமூச்சு உள்ள வரை) சிறை என்ற 3 ஆயுள் தண்டனையும், மற்ற 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பாததால், கோகுல்ராஜின் தாய் சித்ரா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோகுல்ராஜை தேடிய போலீசார், நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவரை சடலமாக மீட்டனர்.

இந்த கொலையில் சங்ககிரி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் (வயது 35), அவரது கார் ஓட்டுனர் அருண் (22), இவர்களது கூட்டாளிகள் சம்பந்தப்பட்டிருப்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்தது.

பட்டியல்சாதியைச் சேர்ந்த கோகுல்ராஜ் வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணுடன் கோகுல்ராஜ் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் அவரை கண்ணைக்கட்டி, நண்பரின் கார் எண்ணை மாற்றி, அதில் ஏற்றிக்கொண்டுபோய், தற்கொலை செய்துகொள்வதாக வீடியோ ஒன்றை தனது செல்போனில் பதிவு செய்ய மிரட்டியதுடன், தற்கொலை குறிப்பு ஒன்றையும் கட்டாயப்படுத்தி எழுத வைத்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், ரயில் தண்டவாளம் அருகே கோகுல்ராஜின் தலையை கொடூரமாக துண்டித்து கொலை செய்துவிட்டு அந்தப் பெண்ணின் செல்போனை ஆற்றில் எறிந்துவிட்டு அங்கிருந்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. கோகுல்ராஜை மிரட்டி தற்கொலை செய்வதாக வீடியோ எடுத்து பின்னர் கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசியதும் உடற்கூராய்வில் நிரூபணமானது.

முக்கிய குற்றவாளியான யுவராஜ் தலைமறைவானார். இந்த சாதி ஆணவப் படுகொலை வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா அதே ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் இந்த வழக்கு விசாரணை நாமக்கல் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

கொலைவழக்கில் தேடப்பட்ட யுவராஜ் சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் ஆடியோவை வெளியிட்டது அப்போது பேசுபொருளானது. அதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி தலைமறைவாக இருந்த யுவராஜ் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.

இந்த வழக்கு முதலில் நாமக்கல் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.  அங்கு வழக்கு விசாரணையில் குளறுபடிகள் ஏற்பட்டதாகவும்,  வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்ற கோரியும் கோகுல்ராஜின் தாயார் சித்ரா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கோகுல்ராஜ் கொலை வழக்கை  மதுரை  வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் மொத்தம் 17 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களில் ஒருவர் இறந்தவிட, மீதமுள்ள 16 பேரில் அமுதரசு (42) என்பவர் தலைமறைவாகிவிட, ஏனைய 15 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் விவரம் வருமாறு:- சங்ககிரி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் (வயது 35), அவரது கார் ஓட்டுனர் அருண் (22), இவர்களது கூட்டாளிகள் குமார் என்ற சிவகுமார் (36), சங்கர் (24), அருள்செந்தில் (35), செல்வகுமார் (43), தங்கதுரை (31), சதீஷ்குமார் (26), ரகு என்ற ஸ்ரீதர் (21), ரஞ்சித் (22), செல்வராஜ் (32), சந்திரசேகரன் (44), பிரபு (34), கிரிதர் (23), சுரேஷ் (37) என 15 பேர்.

2019ஆம் ஆண்டு மதுரை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் மொத்தம் 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். மேலும் 500 ஆவணங்களும், 74 சான்றுப் பொருட்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

சுமார் 2 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கு விசாரணைக்குப்பின், யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்றம் கடந்த (மார்ச்) 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட யுவராஜ் உட்பட 10 பேருக்கும் தண்டனை விவரம் வரும் 8ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் நீதிமன்றம் கூறியது. இந்த வழக்கில் சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை மற்றும் சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

வழக்கின் தண்டனை விவரங்களை மதுரை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் இன்று (08-03-2022) காலை 11 மணிக்கு அறிவிப்பதாக இருந்தது. அப்போது யுவராஜ் உட்பட 10 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து தண்டனை தொடர்பான இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தண்டனை விவரங்களை இன்று பிற்பகலுக்கு நீதிபதி ஒத்திவைத்து, பின்னர் தண்டனை விவரத்தை அறிவித்தார்.

அதன்படி, யுவராஜ், மற்றும் அவரது கார் ஓட்டுநரான அருண் ஆகியோருக்கு சாகும் வரை சிறை, அதாவது 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சம்பத் குமார் தீர்ப்பளித்தார். குமார், சதீஷ்குமார், ரஞ்சித், ரகு, செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். மேலும், பிரபு, கிரிதர் ஆகியோருக்கு கூடுதலாக 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

Read previous post:
0a1a
மனைவியை விவாகரத்து செய்தார் இயக்குனர் பாலா!

பிரபல இயக்குனர் பாலாவுக்கும், முத்துமலர் என்பவருக்கும் 2004ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி மதுரையில் பாரம்பரிய முறைப்படி, பெற்றோர்களின் ஏற்பாட்டில் திருமணம் நடந்தது. அவர்களுக்கு பிரார்த்தனா என்ற

Close