“விவசாயிகளை காப்பாற்ற திரையுலக சங்கங்கள் களம் இறங்கும்”: விஷால் அறிவிப்பு!
‘ஒரு கனவு போல’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நான் இப்போது நடிகனாகவோ, நடிகர் சங்க செயலாளராகவோ பேசவில்லை .ஒரு மனிதனாக பேசுகிறேன்.
காப்பாற்ற வேண்டிய விவசாயிகள் அழிந்துகொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு விவசாயியையும் காப்பாற்ற வேண்டும்.
அதற்காக எங்கள் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி மற்றும் அனைத்து திரையுலக சங்கங்களும் இறங்க இருக்கிறோம். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும். அது சம்பந்தமாக இப்போதுதான் பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பேசினேன்.
இவ்வாறு விஷால் கூறினார்.
இவ்விழாவில் கலந்துகொண்டதற்கு விஷாலுக்கு பரிசு தர இருப்பதாக நடிகர் சௌந்தர்ராஜா அறிவித்தார். ஆனால், “எனக்கு பரிசு எதுவும் வேண்டாம்” என்று விஷால் மறுத்து விட்டார். அதனால் ‘ஒரு கனவு போல’ படத்தின் தயாரிப்பாளர் சி.செல்வகுமாரும், நடிகர் சவுந்தர்ராஜாவும், “நீங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக எடுக்கும் முயற்சிக்கு உதவ முதல் நன்கொடையாக நாங்கள் இதை தருகிறோம்” என்று கூறி ரூ.25 ஆயிரத்தை நன்கொடையாக விஷாலிடம் கொடுத்தனர்.