“தொகுதிப்பக்கம் ஏன் வருவதே இல்லை” என கருணாஸை கேட்டவர் கைது!

காமெடி நடிகர் கருணாஸூக்கு இருப்பும் பிழைப்பும் சென்னையில் தான். முக்குலத்தோரிடம் இருக்கும் சாதி வெறியைத் தூண்டிவிட்டு, அதை பயன்படுத்தி தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ‘முக்குலத்தோர் புலிப்படை’ என்ற அமைப்பை தொடங்கிய அவருக்கு, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பை அளித்தார் ஜெயலலிதா.

தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆன கருணாஸ், அதன்பிறகும் சென்னையிலேயே இருக்கிறார், தொகுதிப் பக்கம் வருவதே இல்லை என்ற அதிருப்தி திருவாடானை தொகுதி மக்களுக்கு இருக்கிறது.

இந்நிலையில், கருணாஸ் 2 நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் வந்து கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அப்போது, திருவாடானை அருகே உள்ள புல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த அகிலன் (வயது 39) என்பவர் கருணாஸை செல்போனில் அழைத்து, “தொகுதி மக்களாகிய நாங்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். ஆனால், நீங்களோ தொகுதிக்கு வருவதே கிடையாது” என்று குற்றம் சாட்டினாராம்.

இதையடுத்து அவருக்கும், கருணாஸூக்கும் இடையே செல்போனிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே, தனக்கு அகிலன் மிரட்டல் விடுத்ததாக கேணிக்கரை போலீசில் கருணாஸ் அளித்தார்.

கருணாஸ் அளித்த புகாரின் பேரில் அகிலனை கேணிக்கரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.