“அன்புக் குழந்தைகள் சரண்யா, பரணிகாவுக்கு…” – சுப.உதயகுமாரன்

என்ன நடக்கிறது என்றே தெரியாமல், ஏன் எரிகிறோம் என்றே புரியாமல்,  நின்ற இடத்தில் எரிந்து முடித்த உங்கள் இருவரின் படங்களைப் பார்த்தது முதல் கடந்த இரண்டு நாட்களாக ஒருவிதக் கையறுநிலையில் இருந்தேன். அதனால் இன்று காலை எனது தோழர்கள் மூவரும், நானும் உங்கள் அப்பாவையாவது போய்ப் பார்ப்போம் என்று நெல்லை ஹைகிரவுண்ட் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தோம்.

ஆனால் அவர் யாரையும் பார்க்கும் நிலையிலோ, பேசும் நிலையிலோ, உணரும் நிலையிலோ இருக்கவில்லை. இவ்வளவு மோசமான தீப்புண் காயங்களுடன் கிடந்த ஒருவரை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை. மருத்துவர்கள் என்னைத் தனியாக அழைத்துச் சென்று, இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்துவிடுவார் என்று சொன்னார்கள். நானும் உங்கள் அப்பா சீக்கிரம் இறந்து போக வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஒருவேளை அதிசயமாக  தப்பித்துக் கொண்டால்கூட, தீயில் கருகி நின்ற உங்கள் இருவரையும் நினைத்து நினைத்து அந்த மனிதன் எப்படி துடித்துப் போவார்? இதற்குப்பிறகு எப்படி ஓர் இயல்பான வாழ்க்கையை அவரால் வாழ முடியும்?

உங்கள் அப்பா சாகக்கிடந்த அறைக்கு வெளியே உங்கள் கோபி சித்தப்பாவும், பலவேசம் தாத்தாவும் அல்லாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் கொஞ்சம் பேசிவிட்டு, நீண்ட நேரம் சூனியத்தை நோக்கியவாறே அங்கே நின்றுவிட்டு, கரைபுரண்டு எழுந்த ஆத்திரத்தில் கொஞ்சத்தை ஊடகங்களிடம் கொட்டித் தீர்த்துவிட்டு விடைபெற்றோம்.

சற்று நேரத்தில் உங்கள் அப்பா இறந்துவிட்டதாகவும், உங்கள் சித்தப்பா, தாத்தாவை காவல்துறை கைது செய்திருப்பதாகவும் செய்திக் கிடைத்தது. உடனே நாங்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு விரைந்தோம். அங்கே பல கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள், தோழர்கள் குழுமியிருந்தனர். உங்கள் அப்பாவின் உடல் ஹைகிரவுண்ட் மருத்துவமனைப் பிணவறையில் இருப்பதாகவும், உங்கள் சித்தப்பா, தாத்தாவை அங்கேக் கொண்டுபோவதாகவும் கேள்விப்பட்டு, ஒட்டுமொத்தமாக அனைவரும் அங்கேச் சென்றோம்.

உங்கள் அப்பாவின் உடலைப் பெற்றுக்கொண்டு பிரச்சினையை முடித்துவைக்க உங்கள் தாத்தாவும், சித்தப்பாவும் வற்புறுத்தப்பட்டார்கள். தாத்தா கொஞ்சம் ஊசலாடிக்கொண்டும், சித்தப்பா ஓரளவு உறுதியாகவும் இருந்தனர். சற்று நேரத்தில் உங்கள் அப்பாவின் ஊர்க்காரர்கள், உறவுக்காரர்கள், ஆளும்கட்சி பிரமுகர்கள் சிலர் அங்கே வந்தனர். தாத்தாவைத் தனியாக அழைத்துச் சென்றார்கள்.

உங்களிருவரின் பெற்றோரும் கந்துவட்டி பிசினஸ் செய்தவர்கள்தான், அவர்களுக்கு வீடு, நிலம் எல்லாம் இருக்கிறது என்றெல்லாம் அவதூறு பேசிய மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் நேரில் வந்து, அந்தச் சொத்துக்களை அடையாளம்காட்டி, அவற்றை விற்று, உங்கள் அப்பா அம்மாவின் கடன்களை அடைத்துச் செல்ல வேண்டும் என்று உங்கள் சித்தப்பா கோரிக்கை வைத்தார். “மக்கள் குறை தீர்ப்பு” திங்கட்கிழமைகளில் ஆறு தடவை முறையிட்டும் உங்கள் அப்பா, அம்மாவை அனாதைகளாக விட்டுவிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அங்கே வரவேண்டும் என்று அழுதார். தனது பாதுகாப்புப் பற்றி அவர் கவலை தெரிவித்தார்.

ஆனால் அரசுக்கான வேலையை முடித்துக்கொடுக்க வந்தவர்கள் அதை சற்று நேரத்தில் கச்சிதமாக நிறைவேற்றினார்கள். நாங்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, உங்கள் தாத்தாவிடம் கையெழுத்து வாங்கி, உங்கள் அப்பாவின் பிணத்தை ஆம்புலன்சில் ஏற்றி மின் மயானத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

உங்கள் பாட்டியும், அத்தை ஒருவரும், மாமாவும் உங்கள் அப்பாவின் பிணத்தை வாங்கக்கூடாது என்று அழுதார்கள், அரற்றினார்கள், பிடிவாதம் பிடித்தார்கள். உங்கள் ஊர் மக்களோ, உறவினர்களோ ஓர் ஐநூறு பேர் வந்திருந்தால், இந்தக் கோரிக்கையை முன்வைத்து கொஞ்ச நேரம் ஒரு சிறு போராட்டம் நடத்தியிருக்கலாம். வந்திருந்த வெறும் பத்து பேரால் எதுவும் செய்ய முடியவில்லை.

கலெக்டர் வர வேண்டும், எஸ்.பி. வரவேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து, முட்டி மோதிக்கொண்டிருந்த கோபி சித்தப்பா சுற்றி வளைத்து காவல்துறை வேனில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டார். அதைக் கேள்வி கேட்டத் தலைவர்களை ‘அவரது பாதுகாப்புக்காக அழைத்துச் செல்கிறோம்’ என்று அதிகாரிகள் அதட்டினார்கள்.

பணம் இல்லாதவர்கள், பலமிக்க தொடர்புகள் இல்லாதவர்கள், பின்புலம் இல்லாதவர்கள் இந்த நாட்டில் எதையும் சாதிக்க முடியாது. கோபி சித்தப்பாவைப் பார்த்தபோது எனக்குப் பரிதாபமாக இருந்தது. அவரை என்ன செய்யப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. பெரும்பாலும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்குள் பெட்ரோல் கடத்திச்சென்று உங்கள் நால்வரின் தற்கொலையைத் தூண்டியதாக, அதற்கு உதவியதாக வழக்குப் போடலாம். அல்லது மொத்தப் பிரச்சினையையும் திசை திருப்பும் வகையில் புதிய திரைக்கதை வசனம் எழுதி பொய் வழக்குகள் போடலாம். அல்லது ராம்குமார் கதையை முடித்தது போல, கதையை முடித்தும் வைக்கலாம்.

என்னுடன் நின்ற தலைவர்களின், தோழர்களின் நெஞ்சங்களில் எல்லாம் நீங்கள் இருவரும்தான் நிறைந்திருந்தீர்கள் சரண்யா, பரணிகா. முபாரக் மாமா இரண்டு நாட்களாக சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை என்று பொருமிக் கொண்டிருந்தார். பாஸ்கர் மாமாவின் குரல் கட்டி, பேசக்கூட முடியாமல் துன்புற்றார். ரமேஷ் மாமா “இப்படியெல்லாம் செய்கிறார்களே,  கோபியை என்ன செய்வார்களோ?” என படபடத்துக் கொண்டிருந்தார்.

சிரிப்பும், உரையாடலும், உற்சாகமுமாய்த் திரியும் டி.வி. அண்ணாக்கள், அக்காக்கள் எல்லோரும் வாடிய முகங்களோடு, கவலையோடு காட்சியளித்தனர். சில போலீஸ்காரர்கள்கூட உங்கள் வேதனையைச் சுமந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. பிணவறை அருகே திரண்டிருந்த கூட்டத்தில், இரண்டு பெரும் ஈடுபாடுகளே கரைபுரண்டு ஓடின.

“பிரச்சினையைக் கமுக்கமாக முடித்துவிட்டு, அங்கிருந்து நகர வேண்டும், அடுத்தக் கட்டம் நடப்பதுபோல நடக்கும்” என்று ஒரு சிலர் நினைத்தனர், செயல்பட்டனர். நான்கு பேர் செத்தாலும், நானூறு பேர் செத்தாலும் அவர்களின் அணுகுமுறை அப்படித்தான் இருக்கும். போனவர்கள் போய்விட்டார்கள், இருப்பவர்களை (குறிப்பாக அதிகாரிகளை, அரசியல்வாதிகளைப்) பாதுகாப்போம், இங்கே எந்த பெரிய மாற்றத்தையும் யாரும் கொண்டுவந்துவிட முடியாது என்றெல்லாம் நினைக்கும் யதார்த்தவாதிகள் அவர்கள். அவர்கள் அரசியல் சமூகத்தின் அங்கமானவர்கள் அல்லது அடிவருடிகள். பதவி, அதிகாரம், பணம், பகட்டு என்று அலைபவர்கள்.

இன்னொரு பக்கம் “இப்படியெல்லாம் நடக்கிறதே, நம்மால் பெரிதாக எதுவும் செய்ய இயலவில்லையே” என்று கையறுநிலையில் கைகளைப் பிசைந்துகொண்டு பலர் அலைந்து கொண்டிருந்தனர். இந்த அநியாயத்தை, அக்கிரமத்தை கேள்வி கேட்காமல் விட்டுவிடக் கூடாது, இதற்கு சாட்சியாக இருந்து, பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க வேண்டும், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், இந்த அநீதி இனிமேல் யாருக்கும் இழைக்கப்படக்கூடாது என்று சிந்திக்கும், செயல்படும் கொள்கையாளர்கள் அவர்கள். அவர்கள் குடிமைச் சமூகத்தின் அங்கத்தினர்கள் அல்லது அனுதாபிகள். நீதி, நியாயம், மக்கள், உரிமை என்று இயங்குபவர்கள்.

வலிமையானவர்களுக்கும் எளிமையானவர்களுக்கும், சக்திமிக்கவர்களுக்கும் சக்தியற்றவர்களுக்கும், அதிகாரத்துக்கும் ஏதுமற்றோருக்கும் இடையே நடக்கும் கயிறு இழுப்புப் போட்டியாக இந்த உலக வாழ்வு மாற்றப்பட்டுவிட்டது. ஒருவரையொருவர் காத்து நிற்பதற்கு பதிலாக, ஒருவரையொருவர் கவிழ்த்து விடுவதே வாழ்வின் நியதி என்று ஏற்பாடாகிவிட்டது. மனிதம், அன்பு, கருணை, உண்மை, நேர்மை  போன்றவை பலவீனத்தின் அடையாளங்களாக ஆக்கப்பட்டுவிட்டன.

உலகமயமாக்குகிறோம், ஒன்றாக்குகிறோம் என்று சொன்னாலும், ஒவ்வொரு பலவீனமானவரையும் தேர்ந்து ஒதுக்கி ஒடுக்கி விடுகிறோம். . பணவெறி எனும் நோய் இந்த உலகைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நோய் இல்லாதவர்கள் எல்லோரும் சூனியக்காரர்கள், சுட்டெரிக்கப்பட வேண்டியவர்கள் என்று வரையறுத்து விட்டோம். இந்த உலகில் நீண்ட நாள் வாழ்வது ஒருவித தண்டனையாக மாறிக் கொண்டிருக்கிறது.

சுதந்திரத்தை சோறு தரும் பயிராக, சொர்க்கம் தரும் பிள்ளையாக உருவகப்படுத்திப் பாடினார் பாரதி தாத்தா:
“தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?”

உங்களை கருகச்செய்ய உங்கள் அப்பா, அம்மா எடுத்த முடிவு தவறானது. ஆனால் அந்தக் குற்றத்தில் எங்கள் ஒவ்வொருவருக்கும் பங்கும், பொறுப்பும் இருக்கிறது சரண்யா, பரணிகா. நீங்கள் இருவரும் உங்கள் பெற்றோரும் கருகத் திருவுளம் பூண்ட என்னை, எங்களை மன்னித்து விடுங்கள்.

இன்னுமொருமுறை பிறப்பதாக இருந்தால், எங்கே வாழ்வின் அடிப்படைத் தேவைகள் எல்லாம் மனித அவகாசங்களாகப் பார்க்கப்பட்டு பூர்த்தி செய்யப்படுகின்றனவோ, எங்கே அனைத்துத் துறை தலைவர்களும் பாசமிக்க, தன்னலமற்ற ‘அப்பா, அம்மா’ போல சிந்தித்து செயல்படுகிறார்களோ, எங்கே அதிகாரம் கொண்டோர் எல்லாம் “பிறிதின் நோய் தந்நோய் போல்” போற்றி ஒழுகுகிறார்களோ, அங்கேப் பிறந்திடுங்கள், சரண்யா, பரணிகா. இங்கே இனிமேல் வராதீர்கள்.

மிக்க கேவலத்துடன்,
சுப. உதயகுமாரன்
நாகர்கோவில்.