பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ விழாவில் ஆணவக்கொலை குற்றவாளிகள்!
குற்றப்பரம்பரை என்று ஒரு சமூகத்தை இழிவுபடுத்தி ஒடுக்கி வைத்த கொடுமையைப் பற்றி பாரதிராஜா படம் எடுக்கிறார். அது அவரது சமூகக் கடமை என்றுகூட சொல்லுவேன். தவறு இல்லை.
ஆனால் சில சாதிய கிரிமினல்கள் அதன் விழாவிற்கு அழைக்கப்பட்டு, அவர்களால் பாரதிராஜா ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறார்.
அதிலும், வறட்டு கவுரவம் காரணமாக படுகொலை செய்யப்பட்ட விமலாதேவியின் கொலைக்குக் காரணமான அந்த குற்றவாளிகள் வந்திருந்ததைப் பார்க்கும்போது கேவலமாக இருந்தது.
உங்களுக்கு வெட்கமாக இல்லையா, பாரதிராஜா?
– எவிடென்ஸ் கதிர்
# # #
குற்றப்பரம்பரை என்ற சொல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட சொல்.
ஜமீந்தார்களால் வசூல் செய்யப்பட்டுத் தங்களுடைய பங்காக வந்துசேரவேண்டிய வரவுகளான வரி, திறை, கிஸ்தி ஆகியவற்றைக் கொண்டுவந்து கஜானாவில் சேர்ப்பதில் இடையூறுகளைச் சந்தித்தனர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். இடையூறுகளை ஏற்படுத்தியவர்கள் அடக்கப்படவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பெற்ற சட்டமே குற்றப்பரம்பரைச் சட்டம்.
பிரித்தானிய ஆட்சியர்களால் 1871 இல் அறிமுகம் செய்யப்பட்ட இந்தச் சட்டம் செயல்படுத்தப்படும்போது ஒருவிதமான வட்டாரத் தன்மையை உள்வாங்கிக்கொண்டது. பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு உதவியாகவும் அதிகாரிகளாகவும் இருந்த உள்ளூர் அறிவுஜீவிகள், இந்தியாவைச் சாதிகளாகவே பார்த்து விளக்கும் மனுதர்மவாதிகள். அவர்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் நேரடியாக நிலத்தோடு தொடர்பில் இல்லாத சாதிகள் எவைஎவையெனப் பார்த்துப் பட்டியலிட்டுக் கொடுத்தார்கள். அந்தப் பட்டியலில் இருந்த சாதிகளை முதலில் ‘அடையாளப்படுத்தப்பட்ட சாதிகள்’ (De-notified Tribes) என்று அழைத்தார்கள். அவர்களை ‘பரம்பரை பரம்பரையாகக் குற்றம் செய்த குழுக்கள்’ என முத்திரை குத்தி, ‘குற்றப்பரம்பரைச் சாதிகள்’ (Criminal Tribes) சட்டத்தின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்தார்கள்.
இப்போது இந்தச் சொல்லைப் பயன்படுத்தி திரைப்படம் தயாரிக்கப் போட்டிபோடும் இயக்குநர்கள் பாலாவும், பாரதிராஜாவும், அவர்களுக்குத் துணை நிற்கும் கதாசிரிய எழுத்தாளர்களும் வட்டாரச் சொல்லைச் சாதியச் சொல்லாக – அதிலும் உள்சாதிச் சொல்லாக மாற்றிவிட நினைக்கிறார்கள். தேசிய அடையாளம் சாதிய அடையாளமாக மாறும் பாவனைகள் அரசியல் தளத்தில் மட்டும் நடக்கின்றன என நினைக்க வேண்டியதில்லை. கலை, இலக்கியத்தளத்திலும் நடக்கிறது.
சட்டத்தால் உருவாக்கப்படும் குற்றப்பரம்பரை என்ற சொல் மட்டுமல்ல, சட்டத்தால் உண்டாக்கப்படும் சொற்கள் எல்லாமே பொதுத்தளத்தில் ஒரு அர்த்தத்தில் இருக்கும்; பயன்படுத்தப்படும்போது வட்டாரத் தன்மையுடையதாக மாறிவிடும். எல்லாக்காலத்திலும் இதுதான் நிலைமை. தேசவிரோதச் சட்டம் தமிழ்நாட்டில் ” குடி” ஆதரவு சட்டமாக ஆகியிருக்கிறது அண்மைய உதாரணம்.
– அ.ராமசாமி