“மலாலாவை கொண்டாடிய உலகம் கவுசல்யாவையும் கொண்டாட வேண்டும்!”

சாதி ஆணவத்தால் கொலை செய்யப்பட்ட தனது கணவரின் பெயரில் விரைவில் புதிய அறக்கட்டளை தொடங்கி, காதல் திருமணம் புரிவோரை பாதுகாக்க இருப்பதாக உடுமலை கவுசல்யா தெரிவித்துள்ளார். இதனை வரவேற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, “பாகிஸ்தானின் மலாலாவை கொண்டாடிய உலகம், கவுசல்யாவையும் கொண்டாடி ஊக்கப்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளது.

காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட குமரலிங்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சங்கர், உடுமலை பேருந்து நிலையம் அருகே பட்டப்பகலில் சாதி ஆணவக் கும்பலால் கொலை செய்யப்பட்டார். தாக்குதலுக்குள்ளான அவரது மனைவி கவுசல்யா, தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமாகியுள்ளார்.

சங்கரின் 16-ம் நாள் நிகழ்ச்சிக்காக கோவை அரசு மருத்துவமனையில் இருந்து திரும்பிய கவுசல்யா, குமரலிங்கத்தில் உள்ள தனது கணவரின் இல்லத்தில் வசித்து வருகிறார். அவரை பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினர் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

கவுசல்யா ’தி இந்து’-விடம் கூறியதாவது:

பாதியில் நிறுத்தப்பட்ட கல்லூரிப் படிப்பை மீண்டும் தொடர வேண்டும் என்பது எனது விருப்பம். சாதி வெறியால் கொல்லப்பட்ட சங்கரின் நினைவாக விரைவில் ஒரு அறக்கட்டளை தொடங்கி, சாதி மறுப்புத் திருமணங்கள் செய்வோருக்கு ஆதரவளிக்கப்படும். காதல் திருமணம் செய்வோர் மீது நடைபெறும் அத்துமீறல்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும். சாதிகள் இல்லாத சமுதாயம் மலர வேண்டும். இதுவே அறக்கட்டளையின் நோக்கமாக இருக்கும்.

பிசிஏ படிக்க விரும்புகிறேன். சங்கரை கொலை செய்தோருக்கு அளிக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் எனது எதிர்கால நடவடிக்கைகள் இருக்கும். பள்ளி, கல்லூரிகளில் சாதி பார்க்காமல் இருக்கும் வகையில் தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.

இவ்வாறு கவுசல்யா தெரிவித்தார். அப்போது, சங்கரின் தந்தை வேலுச்சாமி, சகோதரர் விக்னேஸ்வரன் உடனிருந்தனர்.

கவுசல்யாவின் இந்த சூளுரையை வரவேற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிபிசந்தர் கூறியிருப்பது:

“சாதிய வெறியர்களால் வெட்டிச் சாய்க்கப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யா தன் வாழ்க்கை பறிக்கப்பட்ட வேதனையில் முடங்கிவிடாமல், தன் கணவரின் பெயரில் அறக்கட்டளை துவங்கி, காதலர்களை சேர்த்து வைக்கும் உன்னத பொறுப்பை செய்யப் போவதாக சூளுரைத்திருக்கிறார்.

சமூக நீதி காக்கும் இந்த வீராங்கனையை எப்படி பாராட்டினாலும் தகும்.

பாகிஸ்தானின் மலாலாவை கொண்டாடிய உலகம் உடுமலை கவுசல்யாவையும் கொண்டாடி ஊக்கப்படுத்த வேண்டும்.

சமூகப் பொறுப்புள்ள ஊடகங்கள், பத்திரிகைகள் சகோதரி கவுசல்யாவின் தியாகத்தை, தீரத்தை உலகின் பார்வைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.”

0a1d

 

Read previous post:
0a1k
ஜெயலலிதாவை எதிர்த்து மா.சுப்பிரமணியம் போட்டி? தெறிக்க விடலாமா…!

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது முதல், அவரை எதிர்க்கக்கூடிய வலிமையான வேட்பாளர்

Close