பாஜக.வை விமர்சித்த சில நிமிடங்களில் மாற்றி மழுப்பிய ரஜினிகாந்த்!
சென்னையில் இன்று தனது வீட்டுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ”திருவள்ளுவர் போன்ற ஞானிகள் மதம், ஜாதிக்கு அப்பாற்பட்டவர்கள். திருவள்ளுவர் நாத்திகர் அல்ல, ஆத்திகர், கடவுள் நம்பிக்கை கொண்டவர். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததும், அதை டிவிட்டரில் பதிவிட்டதும் அவர்களது (தமிழக பாஜக.வின்) தனிப்பட்ட விருப்பம்” என்றார்.
பாஜகவில் ரஜினி இணைவது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் தொடர்ந்து அவரிடம் பேசி வருவதாகக் கூறப்படும் செய்திகள் குறித்த கேள்விக்கு, ”பாஜகவில் இருந்து யாரும் என்னை அழைக்கவில்லை. இது சம்பந்தமாக யாரும் என்னை சந்திக்கவில்லை. பாஜக எனக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை. பாஜகவில் நான் இணைவது போன்ற மாயை ஏற்படுத்தப்படுகிறது” என்று பதில் அளித்தார்.
மேலும், ”பாஜகவின் நிறமான காவியை திருவள்ளுவருக்கு பூச முயற்சி செய்வதைப் போல எனக்கும் பூச முயற்சி செய்கிறார்கள். ஆனால் திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன்” என்று பாஜக.வின் தலையில் குட்டுகிற விதமாய் தெளிவாக்க் கூறி, அவரது ஸ்டைலில் சிரித்துவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், சில நிமிடங்களிலேயே வெளியே வந்த ரஜினி மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயலும் பாஜக, தனக்கும் பூச முயலுகிறது என்கிற விதமாய் முன்பு பேசியவர், இப்போது அப்படியே மாற்றி, ”எனக்கு பாஜகவின் சாயத்தைப் பூச ஒரு சிலர் முயற்சிக்கிறார்கள். ஊடகங்களில் தான் அப்படி செய்தி வெளியாகிறது” என்று கூறினார். ”எனக்கு பாஜகவின் சாயம் பூசப் பார்க்கிறார்கள். ஆனால் அரசியலில் இதெல்லாம் சகஜம்” என்றும் கூறினார்.
அத்துடன், “தமிழகத்தில் சரியான ஆளுமையான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளது” என்று தனது வழக்கமான பல்லவியையும் பாடினார்.
அங்கிருந்த செய்தியாளர்களோ, ”முதலில் ஒரு பேட்டியில் சொன்னதை சில நிமிடங்களில் மற்றொரு பேட்டி கொடுத்து மழுப்பியும் மாற்றியும் சொல்கிறாரே… என்ன காரணம்? என்று குழம்பித்தான் போனார்கள்!