மிக மிக அவசரம் – விமர்சனம்

“ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது” என்பது கிராமத்து முதுமொழி. அப்படிப்பட்ட மூத்திரத்தை, காக்கி சீருடை அணிந்த பெண் போலீஸ் ஒருவர், பல மணி நேரம் அடக்கி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அவர் என்ன பாடுபடுவார் என்பதை உள்ளத்தை உருக்கும் வகையில் சொல்லும் வித்தியாசமான படம் தான் ’மிக மிக அவசரம்’.

உலகப் பிரசித்திபெற்ற ஒரு திருவிழா பவானி ஆற்றங்கரையில் நடைபெறுகிறது. அந்த திருவிழாவுக்கு வெளிநாட்டு மந்திரி ஒருவர் வர இருப்பதால், அவரது பாதுகாப்புக்காக சாலையின் இருமருங்கிலும் போலீசாரை நிறுத்துகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ‘வழக்கு எண்’ முத்துராமன்.

பெண் போலீசாக இருப்பவர் நாயகி ஸ்ரீபிரியங்கா. அவருக்கு பாலியல் வலை விரிக்கிறார் இன்ஸ்பெக்டர் முத்துராமன். எப்படி எப்படியெல்லாமோ கேட்டுப் பார்த்தும் ஸ்ரீபிரியங்கா இணங்க மறுக்கிறார். கடுப்பாகும் முத்துராமன், அவரை பழி வாங்குவதற்காக, வெளிநாட்டு மந்திரிக்கு பாதுகாப்பு என்ற சாக்கில் நீளமான பாலம் ஒன்றின் மீது ஒத்தையில் நிற்க வைக்கிறார்.

நேரம் செல்லச் செல்ல, காக்கி சீருடையில் இருக்கும் ஸ்ரீபிரியங்காவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும்போல் இருக்கிறது. ஆனால் அந்த பாலத்தில் ஒரு பெண் சிறுநீர் கழிப்பதற்கான வசதி எதுவும் இல்லை. வெளியே போய் கழிப்பிடம் தேடி கழிக்கலாம் என்றால், வக்கிரபுத்தி கொண்ட இன்ஸ்பெக்டர் முத்துராமன் அதற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்.

இதற்கிடையில், வெளிநாட்டு மந்திரியின் வருகை இன்னும் சில மணி நேரம் தாமதமாகும் என்ற தகவல் வருகிறது. நொடிக்கு நொடி அதிகரித்துக்கொண்டே போகும் ஸ்ரீபிரியங்காவின் அவஸ்தை, அவரை என்ன பாடுபடுத்துகிறது; அது எப்படி முடிவுக்கு வருகிறது என்பது மீதிக்கதை.

முன்னணி நடிகைகளை விடுங்கள்… அறிமுக நடிகைகள்கூட ஏற்கத் தயங்கும் கதாபாத்திரத்தில், கதையையும் தரமான ரசிகர்களையும் நம்பி துணிச்சலாக நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்காவுக்கு பாராட்டுக்கள். நகரத்துப் பெண்கள் – குறிப்பாக பெண் போலீசார் – பொதுக்கழிப்பிட வசதி இல்லாமல் அனுபவிக்கும் சித்திரவதையை தன் இயல்பான நடிப்பு மூலம் வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் இதயங்களைக் கனக்கச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளார் ஸ்ரீபிரியங்கா. அவருக்கு விருதுகள் குவியும் நிச்சயம்.

0a1e

பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் இன்ஸ்பெக்டராக வரும் ’வழக்கு எண்’ முத்துராமன், அலட்டிக்கொள்ளாமல் அருமையாக வில்லத்தனம் காட்டியிருக்கிறார். ஸ்ரீபிரியங்காவை சிறுமைப்படுத்த அவர் செய்யும் அற்பச்செயல்கள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன.

சக போலீஸ்காரராக வரும் ஈ.ராமதாஸ், தனக்கே உரிய பாணியில் நக்கலாக பஞ்ச் வசனங்கள் பேசி கிளாப்ஸ் அள்ளுகிறார்.

ஸ்ரீபிரியங்காவின் காதலராகவும், ஆம்புலன்ஸ் டிரைவராகவும் வரும் ஹரிஷ்குமார், போலீஸ் உயரதிகாரியாக வரும் சீமான், அகதியாக வரும் அரவிந்தன், இன்ஸ்பெக்டரின் வாகன ஓட்டியாக வரும் வீ.கே.சுந்தர், மற்றும் சரவண சக்தி, லிங்கா, வெற்றிகுமரன், குணசீலன், பேபி சனா ஜெகன் உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு சிறப்பாக உயிரூட்டியிருக்கிறார்கள்.

இதுநாள் வரை தமிழ்சினிமாவில் முக்கியத்துவம் இல்லாத துணை கதாபாத்திரங்களாகவும், அர்த்தம் இல்லாமல் சிரிக்க வைக்கும் காமெடியர்களாகவும் காட்டப்பட்டுவந்த பெண் போலீசார், உண்மையில் தங்களது அன்றாட பணிகளாலும், காமுக மேலதிகாரிகளாலும் எவ்வளவு சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை அழுத்தமாகவும், த்த்ரூபமாகவும் பதிவு செய்து ‘அட…’ போட வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சுரேஷ் காமாட்சி. இதுபோல் இன்னும் நிறைய தரமான நல்ல படங்களை எதிர்காலத்திலும் அவர் தருவார் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்தியுள்ளது. பாராட்டுக்கள்.

இஷானின் இசை, பாலபரணியின் ஒளிப்பதிவு, ஜெகனின் கதை வசனம் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.

மிக மிக அவசரம் – அவசியம் பார்க்க வேண்டிய படம்!

 

Read previous post:
0a1d
”தயாரிப்பாளர் சங்கத்தில் சிஸ்டம் இல்லை”; சுரேஷ் காமாட்சி வேதனை!

’மிக மிக அவசரம்’ திரைப்படம் இன்று (நவ-8)  தமிழகம் முழுக்க 125 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. இதற்கு  பின்னணியில் உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்கத்தின் அரசு தரப்பு

Close