”மயில்சாமியை சிவன் அழைத்துக் கொண்டார்” என்று ரஜினி கூறியிருப்பது…

நடிகர் மயில்சாமி மரணத்தை ஒட்டி நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கும் “அவரை சிவன் அழைத்துக் கொண்டார்” என்பதும், அதையொட்டி பலரும் கருத்து சொல்லி இருப்பதும் சமூகத்தில் என்ன விதமான ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை..

இதய நோய் என்பது கண்டிப்பாக தள்ளிப் போடக்கூடிய தவிர்த்து இருக்க கூடிய ஒன்றுதான். உரிய மருத்துவ ஆலோசனை, உரிய மருத்துவ பரிசோதனை, உணவுக் கட்டுப்பாடு, ஐம்பது வயதுக்கு மேல் என்றால் அவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு, ஒருவேளை அவருக்கு மது – புகைப்பழக்கம் இருக்கும் என்றால் அதற்கான ஆலோசனைகள் என்று 50 வயதிற்கு மேல் உள்ள ஒருவர் தன் உடல் குறித்து எடுத்துக் கொள்ள வேண்டிய மருத்துவ கவனம் குறித்து கவனபடுத்துவதே சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு மரணத்தை எந்தவிதமான விஞ்ஞான தன்மையும் இல்லாமல் வெறுமனே ”சிவன் அழைத்துக் கொண்டார்” என்று சொல்வது அவரின் கடவுள் நம்பிக்கையை நாம் குறை சொல்லவில்லை. அது அவருடைய தனிப்பட்ட உரிமை. ஆனால் அதை தாண்டி கவனப்படுத்த வேண்டிய, எவ்வளவு கடவுள் நம்பிக்கை இருந்தாலும் ரஜினிகாந்த் சிங்கப்பூரில் சென்று மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதைப் போல அந்த வாய்ப்பு இல்லாத நாம் இங்குள்ள மருத்துவ கட்டமைப்பை, மருத்துவ ஆலோசனைகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விவாதிப்பதே இங்கே பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு இதய மருத்துவர் இது தொடர்பாக கூறும் ஆலோசனைகளே பொது ஒழுங்காக இருக்க முடியுமே தவிர ரஜினிகாந்த் கூறும் ஆன்மீக விஷயங்கள் அல்ல. அது ஒருவருடைய ஆன்மீக நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது அன்று.

மயில்சாமி ஒரு நடிகர் அவர் அந்தத் துறையில் 57 வயதில் அவருக்கு இருக்கும் வேலைப்பளு அவர் வயது அல்லது அதற்கு மேல் அதிக வயது உள்ள அந்தத் துறையை சார்ந்தவர்கள் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ ஒழுங்கு குறித்தே அதிகம் கவலைபடுத்த வேண்டும்.

மயில்சாமி என்ற அற்புதமான மனிதர் இன்னும் நீண்ட நாட்கள் வாழ்ந்திருக்க வேண்டியவர்.. ஆழ்ந்த இரங்கல்.

Anbe Selva