அப்பாவின் ஜீன்களை அழித்தவர்கள்!

                                        இரு தலைமுறைகள்

அப்பா ஐந்து செட் வேட்டி சட்டைகள் வைத்திருந்தார்

ஹாஸ்டலுக்கு அவர் எழுதிய கடிதங்களை கண்ணில் நீர்க் கோர்க்காமல் வாசிக்க முடிந்ததில்லை

அப்போதெல்லாம் ஒரு கிளாஸ்கோ மில்க் பிக்கிஸ் பாக்கெட்டை

என்றாவது முழுசாய் சாப்பிட வேண்டும் என்பது தவிர பெரிதாய் வேறு லட்சியங்கள் இருந்ததில்லை

வருடத்துக்கு ஒரு கேம்லின் பேனாவும் தீபாவளிக்கு புதுத்துணியும் வாங்கிக் கொடுத்தார்

தினமும் காலையில் பழைய சோற்றைச் சாப்பிட்டோம்

வருடத்துக்கு கால் காணியாவது நிலம் வாங்கினார்

லாந்தரை பிடிக்கச் சொல்லி நள்ளிரவில் கடலைக்கு தண்ணீர் கட்டினார்

முதுமையடைந்தபோது நிலங்களை மகிழ்ச்சியோடு பிள்ளைகள் பெயருக்கு எழுதிக் கொடுத்தார்

இரண்டு மின்விசை பம்ப்செட்டுகள்
50 தென்னை மரங்கள்
20 தேக்கு மரங்கள்
15 வேம்புகள்
10 பூவரசுகள்

எவ்வளவு சீதனங்களைக் கொடுத்தார்

அந்த அப்பாவின் ஜீன்களைத்தான்
டிவி விளம்பரக்காரன் அழித்தான்

க்ரெடிட் கார்ட் தந்து வங்கிக்காரன் அழித்தான்

பன்னாட்டு கம்பெனிகள் அழித்தன

எளிய தவணைகளில் மயங்கி

அவன் வாழ்நாளில்
5 தொ.கா. பெட்டிகள்
3 குளிர்ச்சாதனப் பெட்டிகள்
2 சலவை இயந்திரங்கள்
ஒரு மகிழ்வுந்து
25 அலை பேசிகள்
50 சிம்கார்டுகள்
வாங்கினான்

0% வட்டி
எத்தனையோ குட்டிகள் போட்டன

எல்லா குட்டிகளுக்கும் டயனோசர் பற்கள்

அவனுக்கும வயதாகிவிட்டது

இந்த எலக்ட்ரானிக் குப்பைகளை பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறோமே

நகாராட்சிப் பூங்காவில் அமர்ந்து
யாரும் தெரியாத வண்ணம்

கண்ணீர் சிந்துகிறானே
இது இவன் கண்ணீர் மட்டுமா

இல்லை..யில்லை

அடர்த்தியான நம் தலைமுறையின்
கண்ணீர்!

– கரிகாலன்

(குறிப்பு: படத்தில் இருக்கும் விவசாயி, கவிஞரின் அப்பா அல்ல.)